நீர்நிலைகளில் களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் அறிவுறுத்தல்

விநாயகர் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம் என மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துளளார்.;

Update:2025-08-09 10:46 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம் சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்க மத்திய, மாசுகட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதன்படி நீர்நிலைகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ், தெர்மோகூல் பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களான முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூர் மற்றும் குலசேகரபட்டினம் ஆகிய இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு மக்கள் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், எஸ்.பி., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்