நெல் கொள்முதல்: எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது - உதயநிதி ஸ்டாலின்
தமிழக அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் அரசாக செயல்பட்டுக்கொண்டு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;
தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு தஞ்சை வந்தார். தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திருவள்ளூர் மற்றும் தென்காசிக்கு தலா 2 ஆயிரம் டன் வீதம் சரக்கு ரெயிலில் தலா 42 வேகன்களில் அனுப்பப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. பின்னர் நெல் கொள்முதல் குறித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் கேட்டறிந்தார்.
அதன்பிறகு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர் திட்டமிடுகிறார். அவரின் எண்ணம் தஞ்சை மண்ணில் ஒருபோதும் எடுபடாது. தமிழக அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் அரசாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பல தவறான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் பற்றி முழுக்க, முழுக்க உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லியுள்ளார்.
அதில் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்து செல்லாததால் அங்கே புதிய நெல் மூட்டைகளை வைக்க இடமில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளார். வழக்கமாக குறுவை சாகுபடி காலத்தில் அக்டோபர் 1-ந் தேதி தான் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஆனால் தி.மு.க. ஆட்சியில் கடந்த ஆண்டில் இருந்து டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் மாதம் 1-ந்தேதியே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தாண்டு நேற்று வரையில் அதாவது 50 நாட்களில் 1,825 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 லட்சம் டன் நெல் மூட்டைகள் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதம் உள்ள 1 லட்சத்து 93 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடர்ந்து விரைவாக நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் அந்த பணிகளும் நிறைவடையும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்னும் 2 லட்சம் டன் நெல் மூட்டைகளை வைக்கும் அளவிற்கு இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் புதிதாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டு தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.