பீகாரை போல் தமிழகத்திலும் காங்கிரசை மக்கள் துடைத்தெறிவார்கள் - வானதி சீனிவாசன் பேட்டி

மக்களை விட்டு காங்கிரஸ் கட்சி வெகுதூரத்துக்கு சென்றுவிட்டது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.;

Update:2025-11-15 02:29 IST

கோப்புப்படம் 

பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையொட்டி தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-

பாஜக கூட்டணிக்கு வாக்களித்த பீகார் மக்களுக்கு நன்றி. பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து பெண்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். வளர்ச்சியும், பாதுகாப்பும் தான் முக்கியம் என்று பீகார் மக்கள் நினைக்கிறார்கள். அதுதான் வாக்குகளாக மாறியுள்ளது. எனவே இனி வர இருக்கிற தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும். தமிழகத்திலும் எங்களுக்கு இதுபோன்று வெற்றி கிடைக்கும். கூட்டணியில் பல கட்சிகள் வரும்.

பீகார் தேர்தல் பணியில் மிகச்சிறப்பாக பணியாற்றிய மகளிர் அணிக்கு பாராட்டுகள். பெண்கள் அரசியலில் வாக்காளர் மட்டுமல்ல, அரசியலில் மாற்றத்தையும் ஏற்படுத்துவார்கள் என்பதை பீகார் பெண்கள் நிரூபித்துவிட்டார்கள். தமிழகத்திலும் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்து, முடிவெடுத்து விட்டார்கள். எனவே பாஜக அணிக்குதான் அவர்கள் வாக்களிப்பார்கள். தமிழகத்தில் மாற்றம் வரும்.

காங்கிரஸ் கட்சி பீகாரில் துடைத்தெறியப்பட்டுவிட்டது. தமிழகத்திலும் மக்கள் காங்கிரசை விரைவில் துடைத்தெறிவார்கள். பீகார் தோல்விக்கு ராகுல் காந்திதான் காரணம். ராகுல் காந்தி பிரசாரத்தை மக்கள் ஏற்கவில்லை. மக்களை விட்டு காங்கிரஸ் கட்சி வெகுதூரத்துக்கு சென்றுவிட்டது. மீண்டும் அவர்கள் வர முடியாது. தேர்தல் நிபுணர்கள் எல்லாரும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை பீகார் தேர்தல் முடிவு காட்டி இருக்கிறது.

இங்கு உள்ளவர்கள் பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தும் அங்கே காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி தான் கிடைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்