தமிழகம் வரும் பிரதமர் மோடி... விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகை கொண்டாட திட்டம்?
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.;
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் இந்த கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையும் அதிமுக கூட்டணியில் இணையுமாறு பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை மையமாக கொண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் அவர் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, ஜனவரி 13ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி ராமேசுவரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் ’தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்க சுற்றுப்பயணத்தின் நிறைவாக புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மேலும், 14ம் தேதி பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் பிரதமர் மோடி கொண்டாட உள்ளார். இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தேர்தல் பணிகள், வியூகங்கள் தொடர்பாகவும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.