விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை பிரதமர் மோடி செய்து வருகிறார்; மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் விமர்சனம்

கோவையில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.;

Update:2025-11-18 16:07 IST

தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்கவும் வலியுறுத்தியும், விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை செய்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், விவசாயிகளின் விரோதி மோடி விவசாயிகள் மாநாட்டிற்கு கோவைக்கு வருகிறாராம்!

விதைகள் மசோதா 2025, மின்சார மசோதா 2025, இரண்டையும் வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் சட்டமாக்க திட்டமிட்டுள்ளது மோடி கூட்டம். விதைகள் என்பது விவசாயிகளின் தனி உரிமை, பண்பாட்டின் அடையாளம், அதை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரைவார்க்கவும் விதை விலையை தாறுமாறாக உயர்த்துவதன் மூலம் விவசாய உற்பத்தி செலவை அதிகரிக்கவும் தான் இந்த சட்டம்.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம், மானிய விலையில் மின்சாரம் என்பது நடைமுறையில் இருக்கிறது. இதை ஒழித்துக் கட்டி அபரிமிதமான கட்டணம் தீர்மானிக்கவும் மின்துறையை தனியார் கம்பெனியிடம் ஒப்படைக்க வழி செய்வதுதான் மின்சார சட்டம் 2025.

இப்படி விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை தொடர்ந்து செய்து வரும் பிரதமர் மோடி எந்த முகத்தோடு விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வருகிறார். அவரை வரவேற்க வர வேண்டும் என்று இங்கு சில கைக்கூலிகள் அழைப்பு வேறு விடுக்கிறார்கள். எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்