காஞ்சீபுரத்தில் மக்கள் சந்திப்பு: நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் விஜய்

சுமார் 55 நாட்களுக்கு பிறகு பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் விஜய் இன்று பங்கேற்கிறார்.;

Update:2025-11-23 09:20 IST

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் தொடங்க இருக்கிறார். அதன்படி சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்தார். ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 11 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு விஜய் தலைமை தாங்குகிறார். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

Advertising
Advertising

காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு ‘கியூஆர்’ கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க நுழைவுச் சீட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும், நுழைவுச் சீட்டு இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் த.வெ.க. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

விஜய்யை பார்ப்பதற்காக கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க தகரத்தால் ஆன தடுப்பு வேலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. 1 கிலோ மீட்டர் தூரம் யாரும் வராத வகையில் தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

இந்த நிலையில், காஞ்சீபுரத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார். அவர் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பங்கேற்கும் பிரசார நிகழ்ச்சி என்பதால், இந்த கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இன்றைய கூட்டத்தில் நெசவாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோரை விஜய் சந்தித்து பேச உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பரந்தூர் விமான நிலைய விவகாரம், சிப்காட் தொழிற்சாலை, நெசவாளர்கள் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் சம்பவத்திற்கு பிறகு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பங்கேற்றிருந்தார். மேலும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை மாமல்லபுரத்தில் சந்தித்தார். இந்நிலையில் சுமார் 55 நாட்களுக்கு பிறகு பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் விஜய் இன்று பங்கேற்கிறார். அதுவும் இந்த சந்திப்பு உள்ளரங்கு கூட்டமாக நடத்தப்படுகிறது. முன்னதாக த.வெ.க. தொண்டர் பாதுகாப்பு படையினருக்கு முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள் உள்ளிட்டோரை வைத்து பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்