பணம் செலுத்தியும் எலெக்ட்ரிக் பைக் வழங்க மறுப்பு: நுகர்வோருக்கு ரூ.1.64 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த ஒருவர், திருச்செந்தூர் குமாரபுரத்தில் உள்ள எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார்.;

Update:2025-11-23 05:34 IST

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்தவர் அருண்சக்திவேல். இவர் திருச்செந்தூர் குமாரபுரத்தில் உள்ள எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார். இதற்கான முழுத் தொகையையும் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனம் 10 நாட்களுக்குள் டெலிவரி செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் வாகனம் டெலிவரி செய்யப்படவில்லை. பின்னர் 3 மாதங்கள் கழித்து புகார்தாரரின் செல்போனுக்கு வாகனம் டெலிவரி செய்யப்பட உள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனையடுத்து அந்த எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு வாகனம் வேறு ஒருவரின் பெயரில் வந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அருண்சக்திவேல் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ஏற்கனவே செலுத்திய முழுத் தொகையான ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 235, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 235-ஐ 6 வார காலத்துக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டு ஒன்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்