ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் -அமித்ஷா ஆவேசம்

பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை அவதூறாக பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.;

Update:2025-08-29 17:55 IST

கவுகாத்தி,

நாடு முழுவதும் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்து, பிகாரில் ராகுல் காந்தி தலைமையில் வாக்குரிமைப் பயணத்தை எதிர்க்கட்சிகள் கடந்த 17-ஆம் தேதி முதல் நடத்தி வருகின்றன. பிகாரில் நடைபெற்று வரும் யாத்திரையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் ராகுலுடன் இணைந்து பங்கேற்கின்றனர். செப்டம்பர் 1-ஆம் தேதி பாட்னாவில் பிரமாண்ட பேரணியுடன் ராகுலின் பயணம் நிறைவடைகிறது. பிகாரில் விரைவில் சட்டப் பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராகுலின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்தது.

இதற்கிடையே, ராகுலின் இந்தப் பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நிர்வாகிகள் எழுப்பிய முழக்கங்கள் தொடர்பான சில வீடியோ பதிவுகள் பாஜகவின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. அதில், ராகுல் காந்தியுடன் மேடையில் இருக்கும் சில நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசுவது பதிவாகியுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி, ‘பொதுவெளியில் மீண்டும் திரும்ப கூற முடியாத வார்த்தைகளை ராகுல் காந்தி, பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் உடன் இருப்பவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக பேசியுள்ளனர். இதற்கு முன்பு இவ்வளவு தரம்தாழ்ந்த வார்த்தைகள் அரசியல் களம் கண்டது இல்லை. ராகுல் நடத்தும் இந்தப் பயணம் அவதூறு பரப்புவதில் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்தும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். பிகார் மக்கள் ராகுலையும் அவருடன் பயணிப்பவர்களையும் மன்னிக்க மாட்டார்கள்’ என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் தாயார் ஹீராபென் மோடி குறித்து அவதூறு பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இது தொடர்பாக அமித்ஷா கூறியதாவது: –

“ராகுல் காந்தியிடம் சிறிதளவு நல்லெண்ணம் மீதமிருந்தால், அவர் மோடியிடமும், அவரது மறைந்த தாயாரிடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.  இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அனைவரையும் வேதனைப்படுத்தியுள்ளது.

மோடியின் தாயார் ஒரு ஏழைக் குடும்பத்தில் வாழ்க்கை வாழ்ந்து, தனது குழந்தைகளை மதிப்புகளுடன் வளர்த்து, தனது மகனை நம்பிக்கைக்குரிய தலைவராக்கினார். அத்தகைய வாழ்க்கைக்கு அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது இந்திய மக்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. அரசியல் வாழ்க்கையில் இதை விட பெரிய வீழ்ச்சி எதுவும் இருக்க முடியாது, அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்