காதலிக்க மறுப்பு.. மாணவியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய காதலன்
கொலை செய்ய திட்டம் தீட்டிய ஒரு தலைக்காதலன் உட்பட 2 பேர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டனர்.;
சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லக்கூடிய விமானத்தில் பயணம் செய்தற்காக வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்களை சோதனை செய்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் அதில் ஒரு நபரின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, இளம்பெண்ணின் புகைப்படத்தை ஒருவருக்கு அனுப்பி இந்த பெண்ணை கொலை செய்ய வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து எந்த நபருக்கு இந்த குறுஞ் செய்தி அனுப்பப்பட்டது என விசாரித்த போது அவருடன் பயணம் செய்ய வந்த மற்றொரு நபருக்கு அந்த குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்தது.
மேலும் விசாரித்ததில் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது, இதையடுத்து இருவரின் பயணத்தை ரத்து செய்து பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலையம் வந்த போலீசார் 2 பேரையும் பீர்க்கன்காரணை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தன்ராஜ் (வயது 21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான விக்னேஷ் (25) என்பது தெரிய வந்தது. மேலும் தன்ராஜ் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை 2 வருடங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததும், அதை அந்தப் பெண் ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தன்ராஜ் பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 2 வாலிபர்களையும் பீர்க்கன்கரணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.