அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது ஆண்டவன் கையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்றைய கோரிக்கையாக உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.;
மதுரை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அ.தி.மு.க. ஊழல் கட்சி என்று விஜய் கூறியுள்ளாரே? என நிருபர்கள் கேட்டனர்.மேலும் இது தொடர்பாக விஜய் மீது அ.தி.மு.க.வினரிடமிருந்து வார்த்தை போர் நடத்தப்படுகிறதே? என்று கேட்டதற்கு, அனைத்து கேள்விகளுக்கும் உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்று கூறி விட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து விமானத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் அனைத்து சக்திகளும், ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்றைய தலையாய கோரிக்கையாக உள்ளது. என் கோரிக்கையும் அதுதான்,” என்றார்.
அப்போது, மீண்டும் அ.தி.மு.க.வில் நீங்கள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆண்டவன் கையில் உள்ளது’ என்றார்.
இதுபோல் கூட்டணியில் உங்களை இணைப்பது குறித்து டி.டி.வி.தினகரன் பேசினாரா? என்றும் கேட்கப்பட்டது. “டி.டி.வி.தினகரன் உள்பட யாரும் என்னை அழைக்கவில்லை, பேசவில்லை” எனவும் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.