ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்

கஞ்சா பார்சல்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.;

Update:2025-06-08 07:15 IST

ராமேசுவரம்,

ராமேசுவரம், தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, பீடி இலை, ஏலக்காய், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் படகுகளில் கடத்தி செல்லப்படுகின்றன. இந்தநிலையில் ராமேசுவரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி நடப்பதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின்பேரில் ராமேசுவரம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் தலைமையில் போலீசார், துறைமுகம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்போது அங்கு நின்றிருந்த கார் ஒன்றில் இருந்து சில பார்சல்களை படகில் சிலர் ஏற்ற முயன்றனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது 25 பார்சல்களில் 50 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

எனவே இலங்கைக்கு கடத்த முயன்றதாக ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த சகாயராஜ் (வயது 34), ராமச்சந்திரன் (26), குலோத்தமன் (40), சந்தோஷ் (37), சச்சின் (27), அர்த்தினாஸ் (41) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இந்த கஞ்சா பார்சல்கள் ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி கொண்டு வரப்பட்டதாகவும், காரை ஓட்டி வந்தவர்கள் திருப்புல்லாணி அருகே ரெகுநாதபுரத்தில் காரை நிறுத்திவிட்டு அந்த தகவலை வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு தப்பிச்சென்றார்களாம்.

பின்னர் அந்த காரை ராமேசுவரத்துக்கு கொண்டு வந்து கஞ்சா பார்சல்களை படகில் ஏற்ற முயன்றபோது அந்த கும்பல் பிடிபட்டுள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டபோது இந்த கும்பலுடன், இலங்கையை சேர்ந்த கடத்தல் ஏஜென்ட் ஒருவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் அவர் இந்த கஞ்சா பார்சல்களை நடுக்கடலில் வந்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததன் பேரில், 6 பேரும் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் கைப்பற்றி இருக்கும் இந்த கஞ்சா பார்சல்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார்?, நடுக்கடலில் பெற்றுக்கொள்ள இருந்த இலங்கையை சேர்ந்த நபர் யார்? என்பது குறித்து கூடுதல் சூப்பிரண்டு சுப்பையா, துணை சூப்பிரண்டு சுப்பையா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்