குளிப்பதற்காக 'ஹீட்டர்' மூலம் தண்ணீரை சூடாக்கியபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-06-23 22:20 IST

கோப்புப்படம் 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த புதுமந்து ஓடைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 41). இவர் கால்நடைகள் வளர்த்து வருவதோடு, விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுனித் (10 வயது) தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று சுனித்தின் தாய் வீட்டில் குளிப்பதற்காக வாளியில் தண்ணீர் வைத்து வாட்டர் ஹீட்டரை போட்டுவிட்டு, கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்று விட்டார். தண்ணீர் சூடாகி விட்டதா என சிறுவன் சுனித் கை வைத்து பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதையடுத்து சுனித்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், சிறுவனை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்