பள்ளிகள் நாளை திறப்பு: ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்காக உயர்வு

பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில், தமிழக அரசின் சிறப்பு பஸ்களும் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.;

Update:2025-06-01 14:23 IST

சென்னை,

பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இதன்படி கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. எனவே சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்கள், வீடு திரும்பி வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தடுக்க தமிழக அரசு சார்பில் சுமார் 2,500 சிறப்பு பஸ்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு விடப்பட்டு இருந்தன.

நேற்றும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்றும் ஏராளமானோர் சென்னை திரும்புவதால் ஆம்னி பஸ்களில் அதிகளவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

உதாரணமாக மதுரையில் இருந்து சென்னைக்கு சில பஸ்களில் ரூ.3,999 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தென்மாவட்டம் மட்டுமின்றி, கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் கட்டணம் இருந்தது. அதேபோல் சென்னைக்கு வந்தவர்களும், தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்புவதால் அந்த ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

வழக்கமாக வார நாட்களில் கோவையிலிருந்து சென்னைக்கு வர அதிகபட்சமாக ரூ.1,200 முதல் ரூ.1,300 கட்டணம் வசூலிக்கப்படும்நிலையில், இன்று கோவையிலிருந்து சென்னைக்கு வர ரூ.2,200 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.2,500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், நெல்லையில் இருந்து சென்னைக்கு வர ரூ.2,899 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் விடப்பட்டு இருந்த சிறப்பு பஸ்களில் கூட்டம் அலைமோதியது. அரசு பஸ்களிலும் முன்பதிவுகள் முடிந்து விட்டன. எனவே சிறப்பு பஸ்களில் ஏராளமானோர் சென்னைக்கு வந்தனர். நேற்று சென்னையை நோக்கி ஏராளமான வாகனங்கள் அணிவகுத்ததால் சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இன்றும், அதிகளவு வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்