முதல்-அமைச்சருடன் உரையாடி, புகைப்படம் எடுத்துக்கொண்ட திமுக மூத்த உறுப்பினர்

விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக நேரில் அழைத்து அவருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.;

Update:2025-11-20 17:51 IST

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 41-வது நாளாக நேற்று நடைபெற்ற ‘உடன்பிறப்பே வா’ நிகழ்வில் ஓட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, ஆலங்குளம் தொகுதி சார்பில் பங்கேற்ற தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், ‘‘எங்க அப்பா முத்துவேல் 1967-ல் இருந்து திமுக உறுப்பினர். இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு. உங்ககூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா?’’ என கேட்டார்.

Advertising
Advertising

அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘அப்பாவுக்கு போன் பண்ணுங்க, நானே பேசி வரச் சொல்லுறேன்’’ என கூறியதுடன், அவரது தந்தையுடனும் போனில் பேசினார். இதைக் கண்டு ‘இதுபோதும் தலைவரே’ என ஆனந்த கண்ணீரில் சிவகுமார் நெகிழ்ந்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று தொலைபேசியில் பேசிய ஆலங்குளம் மூத்த உறுப்பினர் முத்துவேலை நேரில் அழைத்துப் பேசி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நினைவுச்சின்னம் வழங்கினார்.

அப்போது மூத்த உறுப்பினர் முத்துவேல், முதல்-அமைச்சரிடம், தனது வாரிசுகளுக்கு திராவிடமணி, ஸ்டாலின் என பெயர் வைத்திருப்பதைச் சொல்லி பெருமிதம் அடைந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்த போது அதிகாலை 1.15 மணிக்கு தங்கள் கிராமத்திற்கு வந்து கொடியேற்றியதை மூத்த உறுப்பினர் முத்துவேல் நினைவுபடுத்தினார். மேலும் 300 வீடுகள் உள்ள தங்கள் கிராமத்திற்கு மட்டும் இரண்டு முறை முதல்-அமைச்சர் வந்துள்ளார் என்றும், முதல்-அமைச்சர் செல்லாத கிராமமே இல்லை என்றும் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

அப்பொழுதெல்லாம் இரவு முழுக்க ஊர் ஊராகச் சென்று கொடியேற்றியதையும், அதிகாலையில் பெண்கள் கோலமிடும் போதும் தன்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுபடுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்