கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வாசித்த கல்லூரி மாணவியும் அதே குடியிருப்பில் வசித்து வந்த சதீஷும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக சதீஷுடன் பேசுவதை மாணவி நிறுத்தி உள்ளார். இதையடுத்து கடந்த 2022 ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரெயில் நிலையம் வந்த மாணவியை தாம்பரம் சென்ற மின்சார ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரி மாணவியை கொன்ற சதீஷை போலீசார் கைது செய்தனர். மேலும் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கை விசாரித்து வந்த நிலையில், சென்னை மகளிர் நீதிமன்றம் சதீஷுக்கு தூக்குத்தண்டனை விதித்து 2024-ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தது.
மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை ஐகோர்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மரண தண்டனையை எதிர்த்து சதிஷ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சதிஷ் குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சதிஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காதலித்தவர் வேறு ஒருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட வேதனையில் திடீர் ஆத்திரத்தில் செய்த செயல் என்றும் இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல என்றும் மரண தண்டனை விதிக்க கூடிய அளவிற்கு அரிதினும் அரிதான வழக்கு அல்ல என்ற வாதத்தை முன்வைத்தார்.
அதற்கு சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தமிழக அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா. காதலித்தவர் வேறு ஒருவரை திருமணம் செய்ய ஒத்து கொண்ட வேதனையில் ஆத்திரத்தில் செய்ய கூடிய செயல் அல்ல திட்டமிட்ட செயல் என்றும் 2 நாட்களாகவே நோட்டமிட்டு 3வது நாள் ரயில் வரும் வரை காத்திருந்து ரயில் அருகில் வந்தவுடன் தள்ளிவிட்டார் என்பதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் குறித்த ஆதாரங்கள் உள்ளதால் மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இது திடீர் தூண்டுதலோ உணர்ச்சி வசப்படுதலோ இல்லை அகங்காரம், பிடிவாதம் மற்றும் ஆணாதிக்க உணர்வில் நடந்த கொடூரமான திட்டமிட்ட செயல் என வாதிட்டார். இதை தவிர கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளி சதிஷ்க்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் 20 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பு எதுவும் வழங்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.