“பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா..? - செங்கோட்டையன் பதில்
காங்கிரஸ் கட்சியிர் ஒரு பிரிவினர் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.;
சென்னை,
த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தி.மு.க.வில் நான் சேரப்போவதாக பரவிய தகவல்களில் உண்மை இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எதிர்த்த தி.மு.க.வில் சேர்வது என்பது ஒருபோதும் நடக்காது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போன்று ஒரு நல்ல தலைவராக விஜய் இருக்கிறார். அதனால்தான் த.வெ.க. எனக்கு சிறந்த தேர்வாக இருந்தது.
விஜய்க்கு 34 சதவீத வாக்குகள் இருக்கிறது. த.வெ.க.வை தி.மு.க.வின் ‘பி’ டீம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஈரோடு மக்கள் சந்திப்பில் தி.முக.வை தீய சக்தி என்று விஜய் பிரகடனப்படுத்தி இருக்கிறார். விஜய் கொள்கை பற்றி கேட்கிறவர்களுக்கு, காஞ்சீபுரத்தில் விஜய் அறிவித்த திட்டங்களே பதில் சொல்லும். எனது அரசியல் பயணம் குறித்து கூற வேண்டுமானால் கூவத்தூர் நிகழ்வின்போது சசிகலா என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து முதல்-அமைச்சர் பதவியை ஏற்க சொன்னார். ஆனால் அதை மறுத்து விட்டேன். அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கவே முன்பு பா.ஜனதாவிடம் பேசினேன். ஆனால் என் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.
நான்தான் எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தினேன். நான் வளர்த்த ஒருவரே என்னை நீக்கியதை நினைத்து 2 நாட்கள் தூங்காமல் அழுதேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. காங்கிரஸ் இரண்டு முகமாக பிரிந்துள்ளது. அவர்கள் எந்த வழியில் செல்வார்கள் என்பதை கணிப்பது கடினமாக இருக்கிறது. ஒரு பிரிவினர் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள். எங்களுடன் பேசி வருகிறார்கள்” என்று அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் விவகாரம், 100 நாள் வேலை சட்டத்திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு கருத்து கூறாததால் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்விக்கு, த.வெ.க.வின் கொள்கை எதிரி பா.ஜ.க. என்பதில் விஜய் தெளிவாக இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையாது என்பதை உறுதிப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு, அது தலைவர்களின் மனநிலையைப் பொறுத்தது என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.