பள்ளி விடுமுறை நிறைவு: 2 ஆயிரத்து 510 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு
கோடை விடுமுறைக்குபின் வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.;
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குபின் வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பள்ளி விடுமுறை நிறைவையொட்டி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் விடுமுறை காரணமாக சொந்த ஊர், சுற்றுலா மற்றும் தாத்தா-பாட்டி ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் ஊர் திரும்ப உள்ளனர்.
இதை கருத்தில் கொண்டும், வார இறுதி விடுமுறையை கருத்தில் கொண்டும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 30, 31-ம் தேதிகளில் 2 ஆயிரத்து 510 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் இதுவரை 26 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.