கூட்ட நெரிசல் சம்பவம்: கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை
கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கரூர்,
கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த குழுவினர் 3 வெவ்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தற்போது 3 இடங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதன்படி தாந்தோணிமலை அரசு சுற்றுலா மாளிகை, அரசு சுற்றுலா மாளிகைக்கு அருகே உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடம், கரூர் மாவட்டம் புகழூரில் உள்ள டி.என்.பி.எல். வளாகம் ஆகிய 3 இடங்களில் சிறப்பு புலனாய்வு குழுவினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் 7 பேர் ஆஜரான நிலையில், நேற்று மீதமுள்ள 3 பேரும் ஆஜரானார்கள். அவர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி முடித்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதற்கிடையில் சிறப்புக்குழு விசாரணைக்கு எதிராக தவெக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.