மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா: டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிறைவு விழா காவல் உயர்பயிற்சியகத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது.;
2024ம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் கடந்த 2024 டிசம்பர் 3 முதல் 20ம் தேதி வரை தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 11 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் மற்றும் 8 சிறப்பு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 28 குழுக்கள் கலந்துகொண்டன.
124 பெண் காவல் பணியாளர்கள் உட்பட மொத்தம் 565 காவல் பணியாளர்கள் அறிவியல் சார்புலனாய்வு, காவல் புகைப்படக்கலை, கணினிவிழிப்புணர்வு, காவல் காணொலிப் பதிவுகலை, நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் மோப்ப நாய் போட்டி எனும் 6 பரந்த தலைப்புகளின் கீழ் 20 போட்டிகளில் உற்சாகமாக் கலந்து கொண்டு தங்களது அர்ப்பணிப்பையும், திறமைகளையும் வெளிப்படுத்தினர்.
இப்போட்டிகளில் 21 தங்கம், 21 வெள்ளி மற்றும் 22 வெண்கலம் மொத்தம் 64 பதக்கங்கள் மற்றும் 14 சுழற்கோப்பைகளை போட்டியாளர்கள் வென்றனர்.
இந்தப் போட்டிகளில் சென்னை மாநகர காவல்துறை, நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் காவல் புகைப்படக் கலை பிரிவில் முதலாம் இடத்திற்கான கோப்பைகளையும், கணினிவிழிப்புணர்வு போட்டியில் இரண்டாம் இடத்திற்கான கோப்பையும் மற்றும் அறிவியல் சார்புலனாய்வு போட்டிகளில் மூன்றாம் இடத்திற்கான கோப்பை என நான்கு கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அதிதீவிரபடை (கமாண்டோ படை) போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று மோப்ப நாய் போட்டியில் முதலாம் இடத்திற்கான கோப்பை, சிறந்த மோப்ப நாய்க்கான கோப்பை மற்றும் நாசவேலை தடுப்புசோதனை பிரிவில் இரண்டாம் இடத்திற்கான கோப்பை என மூன்று கோப்பைகளை வென்றது. குறிப்பிடத்தக்க அறிவியல் சார்புலனாய்வு போட்டியில் வேலுர் சரக காவல் அணி முதல் இடத்திற்கான கோப்பையும் சேலம் நகரம் இரண்டாம் இடத்திற்கான கோப்பையும் வென்றது.
போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா காவல் உயர்பயிற்சியகத்தில் நேற்று (2.7.2025) மாலை நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தலைமை வகித்தார். விழாவில் முதலாவதாக காவல்துறை பயிற்சி இயக்குநர் வரவேற்று பேசினார். பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சிறப்புரை ஆற்றி பதக்கங்கள், சான்றுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த விழாவில் கடந்த பிப்ரவரி 2025-ல் ஜார்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற 68வது அகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்கள் வென்ற தலைமைக் காவலர் பாஸ்கரன் மற்றும் காவலர் ஆனந்த் மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் காவலர் போரங்கிசைதன்யா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
மேலும் அகில இந்திய அளவில் காவல் புகைப்படக்கலை, காணொலிப் பதிவு கடந்த ஜுன் 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற 11வது தேசிய மகளிர் காவல் மாநாடு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தமைக்கு சீரிய பணியாற்றிய உயர் காவல் அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.