நீட் தேர்வு முடிவு வெளியான நாளில் முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் மாணவன் தற்கொலை

நீட் தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது.;

Update:2025-06-16 11:10 IST

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் செம்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழீஸ்வரன். இவரது மகன் ராகுல் தர்ஷன் (வயது 18). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்து நீட் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவு வெளியானது. இதற்கிடையே காரியாபட்டியில் உள்ள உறவினரான முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமி என்பவர் வீட்டில் ராகுல் தர்ஷன், தனது அண்ணன் திலக் தர்ஷனுடன் தங்கி இருந்தார்.

இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திலக் தர்ஷன் எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த ராகுல் தர்ஷன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை தேடியபோது வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் ராகுல் தர்ஷன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காரியாபட்டி போலீசார், ராகுல் தர்ஷன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் செம்பனூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்