மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை

ஞானசேகரனிடம் இன்று குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது.;

Update:2025-02-06 08:50 IST

கோப்புப்படம்

சென்னை,

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட்டு வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. பின்னர் அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் கோட்டூர்புரம் போலீசாரிடம் இருந்த சம்பந்தப்பட்ட கோப்புகளை பெற்று விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்டமாக சிறையில் உள்ள ஞானசேகரன் வீடு மற்றும் சம்பவம் நடந்த அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஞானசேகரன் சம்பவத்தன்று பயன்படுத்திய உடைமைகள் உள்ளிட்டவற்றை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைப்பற்றினர். மேலும் வீட்டு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி அவற்றை சோதனைக்கு உட்படுத்தினர்.

தொடர்ந்து ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அவர் வலிப்பு நோய் நாடகத்தை அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் சைதாப்பேட்டை 9-வது கோர்ட்டில், ஞானசேகரன் செல்போனில் உள்ள ஆடியோக்கள் குறித்து குரல் மாதிரி தடயவியல் சோதனை செய்ய அனுமதிக்க கோரி சிறப்பு புலனாய்வு குழு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து ஞானசேகரனை சிறையில் இருந்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மனுவை விசாரித்த சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு இன்று (வியாழக்கிழமை) ஞானசேகரனிடம் குரல் மாதிரி தடயவியல் பரிசோதனை செய்ய சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். பின்னர் மீண்டும் புழல் சிறையில் ஞானசேகரன் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு இன்று குரல் பரிசோதனை நடைபெற உள்ளது. குரல் பரிசோதனை முடிந்த பின் அவரை மீண்டும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். கோர்ட்டு அனுமதியுடன் நாளை அல்லது நாளை மறுநாள் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்படும் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்