கொளத்தூரில் ரூ.111 கோடி செலவில் துணைமின் நிலையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சமூக நீதி விடுதியில் ரூ.12 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;
கொளத்தூரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் ரூ.110.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள துணைமின் நிலையத்தை திறந்து வைத்து, ஒருங்கிணைந்த கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் ரூ.12 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணேஷ் நகர் பகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் 110.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 230/33 கி.வோ. வளிம காப்பு துணைமின் நிலையத்தை திறந்து வைத்தார்.
சென்னை முழுவதும் சீரான மற்றும் விரிவான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான முயற்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2023-24ம் ஆண்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டம், பதினொன்று வெவ்வேறு துறைகளை உள்ளடக்கிய பல்வேறு முக்கியமான திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்காக 4,183.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1,034.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 திட்டப்பணிகள் மேற்கொள்ள வழிவகை செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 1,000.39 கோடி ரூபாய் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 33.85 கோடி ரூபாய் நிதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.
வட சென்னை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணேஷ் நகர் பகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் 230/33 கி.வோ. வளிம காப்பு துணைமின் நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்-அமைச்சர் 13.05.2023 அன்று அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். அத்துடன், பணிகளின் முன்னேற்றத்தினை தொடர்ந்து கண்காணித்து வந்த முதல்-அமைச்சர், கடந்த 5.08.2024 அன்று துணைமின் நிலைய கட்டுமான பணிகளின் முன்னேற்றத்தினை நேரில் ஆய்வு செய்து குறித்த காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், துணைமின் நிலைய கட்டுமான பணிகள் தொய்வின்றி நடைபெற்று, தற்போது புதிய 230 கி.வோ. துணைமின் நிலையம் மின்னூட்டம் பெறும் வகையில், நான்கு 230 கி.வோ. அதிஉயர் மின்னழுத்த மின் பாதைகள் புதிதாக அமைக்கப்பட்டு, இரண்டு 100 எம்.வி.ஏ. திறனுடைய மின்மாற்றிகள் மூலமாக ஏழு 33 கி.வோ. மின் பாதைகள் புதியதாக அமைக்கப்பட்டு, வடசென்னை பகுதியில் மின்கட்டமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி, உறுதியான மின கட்டமைப்பின் வாயிலாக தடையற்ற மற்றும் தரமான மின்சாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டதோடு, குறைந்த மின்னழுத்த குறைபாட்டினை நிவர்த்தி செய்து, மின்னழுத்த ஏற்ற இறக்கமின்றி சீரான மின்சாரம் விநியோகம் செய்வதை உறுதிசெய்யும் பொருட்டு, 230/33 கி.வோ. வளிம காப்பு துணைமின் நிலையம் முதல்-அமைச்சரால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த துணைமின் நிலையத்தின் மூலமாக ஏற்கனவே இயக்கத்தில் உள்ள கொளத்தூர், பெரியார் நகர், அன்னை நகர், நேர்மை நகர் ஆகிய 33/11 கி.வோ. துணைமின் நிலையங்களுக்கும், தற்போது புதியதாக நிறுவப்பட்டுள்ள கணேஷ் நகர் மற்றும் மாதவரம் ரேடியன்ஸ் 33/11 கி.வோ. துணைமின் நிலையங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும். இத்துணைமின் நிலையங்களின் வாயிலாக கொளத்தூர், பெரியார் நகர், அண்ணாநகர், நேர்மை நகர், கணேஷ் நகர் மற்றும் மாதவரம் சுமார் ஒரு லட்சம் தொழில் மின் நுகர்வோர்கள், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வணிக மின் நுகர்வோர்கள் மற்றும் மூன்று லட்சம் வீட்டு மின் நுகர்வோர்கள் பயன்பெறுவார்கள்.
ஒருங்கிணைந்த கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை திறந்து வைத்தல்
முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீர் வாரியத்தால் தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் (Water Dispensing Unit) நிறுவப்பட்டு பொதுமக்களுக்கு கட்டணமில்லா தரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 55 தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கொளத்தூர், கணேஷ் நகரில் உள்ள ஒருங்கிணைந்த கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் 12 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை முதல்-அமைச்சர் இன்றையதினம் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர், கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதியை பார்வையிட்டு, அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடி, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தடையில்லா சீரான மின்சாரத்தை வழங்கிட துணை மின் நிலையத்தை அமைத்து திறந்து வைத்ததற்காகவும், கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம், மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கொளத்தூர் பகுதி மக்களுக்காக செயல்படுத்தி வருவதற்காகவும், கொளத்தூர் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்-அமைச்சருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.