புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் - ஐகோர்ட்டு உத்தரவு
புராதன சின்னங்கள் ஆணையத்தை அமைக்க தமிழ்நாடு அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
கோப்புப்படம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள்ளும், கோவிலுக்கு வெளியேயும் முறையாக அனுமதி பெறாமல் அறநிலையத்துறை கட்டிடம் கட்டி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதித்தும், புராதன கோவில்கள், கட்டிடங்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட புராதன சின்னங்கள் ஆணையத்தை 4 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்றும் கடந்த அக்டோபர் 9-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாகவும், இந்த ஆணையத்தை அமைக்க 3 மாதங்கள் அவகாசம் வேண்டும். டிசம்பர் 3-ந்தேதி கார்த்திகை தீப பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அதனால், பக்தர்களை கண்காணிக்க கோவில் வளாகத்தில் உள்ள அறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ''திருவண்ணாமலை கோவில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள், புராதன சின்னங்கள் பணிகளை மேற்கொள்ள புராதன சின்னங்கள் ஆணையம் அமைப்பது அவசியமாகும். எனவே, அந்த ஆணையம் அமைக்கும் வரை, திருண்ணாமலை கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் எந்த ஒரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. கட்டுமான பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கிறோம்.
புராதன சின்னங்கள் ஆணையத்தை அமைக்க 3 மாதம் கால அவகாசம் வழங்க முடியாது. இந்த ஆணையம் அமைக்க ஒரு மாதம் அவகாசம் வழங்குகிறோம். அதற்குள் ஆணையத்தை அமைக்கவேண்டும். கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தற்காலிக மாற்று ஏற்பாடுகளை அறநிலையத்துறை மேற்கொள்ளலாம். இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.
அதேபோல, சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்த தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இந்த பிரச்சினைக்கு தீட்சிதர்கள் ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை டிசம்பர் 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.