சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும் - ஜி.கே.வாசன்
கேரள அரசுடன் பேசி சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கேரளா சபரிமலைக்குச் செல்கின்ற தமிழக பக்தர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்குச் செல்வது வழக்கமானது. அவர்களின் பாதுகாப்பான பயணத்துக்கு தமிழக அரசும் துணை நிற்க வேண்டும். கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல விளக்கு மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் திரண்டு செல்கிறார்கள். கடந்த சில நாட்களாக தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை கோவிலில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கோவில் வளாகம் முழுவதும் கடும் கூட்டம் காணப்படுகிறது. சபரிமலைக்குச் செல்லும் பாதைகளில் கூட்ட நெரிசல் காரணமாக பாதுகாப்பாற்ற தன்மையை உணர்வதாகவும், ஐயப்பன் சாமியை தரிசனம் செய்வதில் கால தாமதம் உள்ளிட்ட சில சிரமங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்ற பக்தர்களில் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தும், சாமியை தரிசனம் செய்ய முடியாமலும் திரும்பிச் சென்றனர். ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டு சன்னிதானத்தில் ஐயப்ப சாமியை பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்திற்கு உட்படுவதும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெரிசலைக் கண்டு பயந்து, சன்னிதானத்திற்கு போக முடியாமல், ஐயப்பனை அருகில் சென்று தரிசனம் செய்யாமல் சன்னிதானம் கீழே இருந்தே கும்பிட்டு திரும்பக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த பெண் பக்தர் பம்பாவிலிருந்து நீலிமலை ஏறும் போது அப்பாச்சிமேடு அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சூழலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, சன்னிதானத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்ய, செல்லும் வழியில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்தும் முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் மலைக்குச் செல்வதை தமிழக அரசு மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தமிழக அரசு கேரளாவுக்கு ஐயப்பன் மலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு பக்தர்கள் அனைவருக்குமான பாதுகாப்பையும், சாமி தரிசனத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.