எழில்வனத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கும் முடிவினைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் - சீமான்
எழில்வனத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கும் முடிவினைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
அரசுக்கு சொந்தமான இந்த எழில்வனம் 5000-க்கும் மேற்பட்ட மரங்கள், செடிகள் மற்றும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகிறது. இந்தக் காடு பல ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் மற்றும் அரண் என்கிற தன்னார்வலர் அமைப்பின் கடின உழைப்பின் விளைவாக வளர்க்கப்பட்டது.
2019-ம் ஆண்டில் பேரூராட்சியின் சார்பாக அரசு பொது இடங்களில் மரம் நட்டு வளர்க்கும் அனுமதி வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் கடந்த 6 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வரும் நகர்ப்புறக் காடு இதுவாகும். இந்த இடத்தினை 2021-ம் ஆண்டிலேயே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க ஒதுக்கியபோது எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
இந்த இடத்தில் எவ்விதக் கட்டுமானமும் ஏற்படுத்தும் திட்டமில்லை என்று பதில் கூறி வந்துள்ளது. மரங்கள் நட்டுப் பராமரிக்க அனுமதி வழங்கியபோதிலும், இவ்வனப்பகுதியை உருவாக்கி பாதுகாத்து வருவது அரண் தன்னார்வலர் அமைப்புதான்.
பொதுமக்களின், குறிப்பாக ஆதித்தமிழக்குடியினரின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது, அரண் தன்னார்வலர் அமைப்பினரை வெளியேற்றிப் பொதுமக்கள் எவரும் உள்வர அனுமதி மறுத்து, எழில்வனம் எனும் பெயரை மறைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் என்று மாற்றியமைத்து, அளவீட்டுப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
பொதுமக்களின் எதிர்க்குரல் எழுந்தபிறகு மீண்டும் தற்போது பழைய நிலைக்கு அனைத்தையும் மாற்றியமைத்தாலும், வெறும் வாய்மொழி உறுதிகள் நிரந்தரத் தீர்வாகாது. இந்தக் காட்டில் பல்வேறு மரங்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள் மற்றும் இயற்கை அமைப்புகள் உள்ளன, அவை இந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலைக்கு முதன்மைத்துவம் கொண்டவை.
குறிப்பாக, நீர்த்துளை, பட்டாம்பூச்சித் தோட்டம் மற்றும் பல்வேறு சூழலியல் மண்டலங்கள் போன்றவை இக்காட்டின் சிறப்பம்சங்களாகும். அரசின் புறம்போக்கு நிலங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில் மரங்கள் பெருமளவில் வளர்ந்த பகுதியைத் தேர்ந்தெடுத்து அலுவலகம் அமைப்பது அறிவற்ற செயலாகும். பொதுமக்களின் நலனை மதிக்காமலும், சூழலியல் பாதுகாப்பு குறித்தப் புரிதல் இல்லாமலும் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
எந்தவொரு முன்னெடுப்பு திட்டமிடப்படும்போதும் சூழலியல் பார்வையில் அதன் நன்மை தீமைகளை அரசு ஆய்வு செய்து செயல்பட வேண்டும். நகர்ப்புறங்களில் பசுமையான இடங்கள் குறைவாக உள்ள இந்த நேரத்தில், கட்டுமானப்பணிகளுக்காக 5,000 மரங்களை வெட்டும் நிலை ஏற்பட்டால் காற்று மாசு, வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் உயிரியல் பன்மையக் குறைதல் போன்ற பல சுற்றுச்சூழல் சிக்கல்கள் உருவாகும்.
எனவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க இந்த இடத்தை ஒதுக்கிய ஆணையைத் திரும்பப் பெற்று, எழில்வனத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றியமைக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இடைக்காலத்தில் கட்டுமானப் பணி எனும் பெயரில் எந்தவொரு மரத்தையும் எழில் வனத்துக்குள் வெட்டக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.