திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழகம் - நயினார் நாகேந்திரன்
பொதுமக்கள் தொடர்ச்சியாக போதை கும்பலின் கொலைவெறித் தாக்குதலில் பலிகடாவாகி வருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதை கும்பல் ஒன்று பட்டாக் கத்தி கொண்டு கொடூரமாகத் தாக்கியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
வடமாநிலத் தொழிலாளி, சேலை வியாபாரி, கல்லூரி இளைஞர்கள் எனத் தொடர்ச்சியாகப் பொதுமக்கள் அனைவரும் போதை கும்பலின் கொலைவெறித் தாக்குதலில் பலிகடாவாகி வருவது கஞ்சாவின் கைப்பிடியில் திருவள்ளூர் சிக்கியிருப்பதைத் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதிலும், தொடர்ந்து இது போன்ற கோர நிகழ்வுகளில் ஈடுபடுவது, போதை மருந்தின் ஆதிக்கத்தில் உள்ள இளைஞர்கள் தான் என்பதை உற்று நோக்கையில் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
உண்மையில், திருத்தணியில் நடக்கும் போதை வன்முறைகள் ஒரு சிறு துளியே! தமிழகம் முழுவதும் டாஸ்மாக், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் நடக்கும் வன்முறைகளும் குற்றங்களும் இதைக்காட்டிலும் வரைமுறையற்றது!
போட்டோஷூட் திமுக ஆட்சியில் போதைக் கலாச்சாரத்தால் தமிழக இளைஞர்கள் கண் முன்னே சீரழிந்து போவதையும், சட்டம் ஒழுங்கு சிதைந்து பாதுகாப்பு பறிபோவதையும் கண்ணாரக் கண்ட தமிழக மக்கள் திமுகவை இனி என்றும் ஆட்சி அரியணையில் அமர்த்தமாட்டார்கள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது