டாஸ்மாக் வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம்

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை ஏன் எங்களுக்கு சொல்லவில்லை என சென்னை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியது.;

Update:2025-04-08 13:29 IST

சென்னை,

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை மத்திய அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கிற்கு மத்திய அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, பதில் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக சேர்ந்துள்ளவர்களின் மனுவுக்கு பதில் மனுவையும் அனைத்து தரப்பினரும் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கின் இறுதி விசாரணை 8-ந்தேதி (இன்று) மற்றும் 9-ந்தேதி (நாளை) நடைபெறும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று காலையில் சுமார் 11 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது, அரசு தரப்பில், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில், அடுத்த சில நிமிடங்களில் விசாரணைக்கு வர உள்ளது. அதனால், இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும்'' என்று மீண்டும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ''அமலாக்கத்துறை சோதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, பொதுநலனுக்காகவா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காகவா? இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்டது. இந்த வழக்கு இந்த ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் விசாரிப்பதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆனால், இந்த ஐகோர்ட்டில் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு திடீரென வழக்கு தொடர்ந்த காரணம் என்ன? அந்த காரணத்தை முதல் நாளே இந்த ஐகோர்ட்டில் தெரிவித்து இருக்கலாமே? ஏன் அதை செய்யவில்லை?

தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை ஏன் தவறாக பயன்படுத்துகிறது? இந்த ஐகோர்ட்டை ஏன் அவமானப்படுத்த வேண்டும்? இன்று காலையில் கூட சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை ஏன் எங்களுக்கு சொல்ல வில்லை? இறுதி விசாரணைக்கு பட்டியலிட்ட பிறகு சுப்ரீம் கோர்ட்டு ஏன் செல்ல வேண்டும். சுப்ரீம் கோர்ட்டை தமிழ்நாடு அரசு அணுக உரிமை உள்ளது. அதேநேரம், ஏன் இந்த ஐகோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்காமல் செல்ல வேண்டும்?'' என்று சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

அதற்கு அரசு தரப்பு வக்கீல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குதான் அமலாக்கத்துறை பதில் மனு அரசுக்கு கிடைத்தது. அதன்பின்னர், அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்றார்.  இதையடுத்து, இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்