என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு முயன்றது - கண்ணீர் மல்க பேசிய ராஜேந்திரபாலாஜி

கட்சியை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றதால், தன்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு முயன்றதாக ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.;

Update:2025-07-29 01:30 IST


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 8-ந்தேதி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்களை சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக சிவகாசி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வேலாயுதம் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், "ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. என் மீது பொய் வழக்கு போட்டது. என்னை மிரட்டி பணிய வைக்க பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் நான் கட்சியை காட்டி கொடுக்கமாட்டேன் என்றேன். தனிச்சிறையில் என்னை சந்தித்த போலீஸ் அதிகாரிகள் என்னிடம் கட்சிக்கு எதிராக செயல்பட வற்புறுத்தினர்.

என் உயிர் இருக்கும் வரை நான் அ.தி.மு.க.வில்தான் இருப்பேன். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன். (அப்போது அவர் கண்ணீர் சிந்தியபடி பேசினார்). சிவகாசி சட்டமன்ற தொகுதிதான் என்னை வளர்த்தது. அதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில்தான் போட்டியிடுவேன். யார் தடுத்தாலும் அவர்களின் எண்ணம் நிறைவேறாது.

ராஜபாளையம் தொகுதியில் என்னை சதி செய்து தோற்கடித்தனர். எந்த சாதிக்கும், மதத்துக்கும் நான் எதிராவன் அல்ல. என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு சொந்தம் கொண்டாடுகிறது" என்று அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்