ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு
5-ம் நாள் விழாவாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கருட சேவை நடக்கிறது.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் மாலையை தினந்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் பெரிய பெருமாள் சூடிக்கொண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மதுரையில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும்போது ஆண்டாள் மாலையை அணிந்து கொண்டுதான் ஆற்றில் இறங்குவார். ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டத்தின்போது ஆண்டாள் கோவிலில் இருந்து மாலை, கிளி, வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். இதே போல் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருப்பதி ேகாவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கருடசேவையின்போதும் ஏழுமலையான் அணிந்துகொள்ள, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை அனுப்பி வைக்கப்படும். அந்த மாலையை அணிந்து கொண்டு ஏழுமலையான் கருடவாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கி நடந்து வருகிறது. 5-ம் நாள் விழாவாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கருட சேவை நடக்கிறது. இதையொட்டி ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையை அனுப்பி வைக்கும் வைபவம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று நடைபெற்றது. இதையொட்டி மதியம் 1 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் மாலையை சூடிக்கொண்டு பக்தர்களுக்கு ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். பின்னர் அந்த திருமாலை மற்றும் ஆண்டாள் கிளி உள்ளிட்டவை பெரிய வெள்ளிக்கூடையில் வைத்து, கோவில் மாட வீதிகள் வழியாக கோவில் யானை முன்னே செல்ல ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் கார் மூலம் திருப்பதிக்கு மாலை அனுப்பி வைக்கப்பட்டது.