மனைவியுடனான தொடர்பை கைவிடாத கள்ளக்காதலன்.. வாலிபர் செய்த அதிர்ச்சி சம்பவம்

மனைவியுடனான கள்ளக்காதலை அறிந்த கணவர், அந்த வாலிபரை சந்தித்து கள்ளத்தொடர்பை கைவிடுமாறு எச்சரித்திருந்தார்.;

Update:2025-08-20 09:32 IST

சாதிக் பாஷா 


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு கிராமம் திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா மகன் சாதிக் பாஷா (வயது 28). பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான ஷேக் அமானுல்லா, ஆஷிக் ஆகியோருடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.

அப்போது அப்பகுதிக்கு கத்தி மற்றும் வீச்சரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் சாதிக் பாஷாவை பின்பக்க தலையில் பலமாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சாதிக் பாஷா துடிதுடித்து உயிரிழந்தார். இதைப்பார்த்ததும் அவருடன் இருந்த நண்பர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த பயங்கர கொலை குறித்த தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர குமார், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி, மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் அங்கிருந்து சாதிக் பாஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆலத்தூர் கூட்டு சாலையில் வந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள், சாதிக் பாஷா கொலையில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து தெரியவந்ததாவது:-

திண்டிவனம் அருகே முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா (26). இவர் மரக்காணம் அருகே கூனிமேடு கிராமம் திடீர் நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து மாமியார் வீட்டிலேயே குடியிருந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கூனிமேடு கிராமத்திலேயே கணவன், மனைவி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது கூனிமேடு திடீர் நகர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் சாதிக் பாஷாவுக்கும், ரகமத்துல்லா மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

மனைவியுடனான கள்ளக்காதலை அறிந்த ரகமதுல்லா, சாதிக் பாஷாவை சந்தித்து கள்ளத்தொடர்பை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனாலும் அவர், மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்களும் சாதிக் பாஷாவை அழைத்து எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் ரகமதுல்லா கூனிமேட்டில் இருந்து வாடகை வீட்டை காலி செய்துவிட்டு தனது சொந்த ஊரான திண்டிவனம் அருகில் உள்ள முருங்கப்பாக்கத்துக்கு சென்று விட்டார். ஆனால் சாதிக் பாஷா கள்ளத்தொடர்பை விடாமல் தொடர்ந்து கள்ளக்காதலியுடன் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். இதனால் ரகமத்துல்லா ஆத்திரமடைந்து சாதிக் பாஷாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாதிக் பாஷா தனது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள கடற்கரை ஓரம் அமர்ந்து சிலருடன் மது குடித்து கொண்டிருந்தார். இந்த தகவல் தெரிந்த ரகமத்துல்லா, தன்னுடன் கூலிப்படையான விக்கிரவாண்டி கலித்திரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பாரதி என்கிற பாரதிதாசன் (22), ராஜேஷ்குமார் மகன் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் (21), வானூர் சின்னஅம்மன் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் செல்வகுமார் (23), வானூர் கொடுக்கூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் மகன் குணசேகரன் (22) ஆகியோருடன் சேர்ந்து சாதிக் பாஷாவை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்