மாமல்லபுரம் கடற்கரையில் அதிக அளவில் காணப்படும் தாதுமணல்
கனமான, தாது மணல் என்பது தாது வைப்புகளின் ஒரு வகுப்பாகும்.;
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் தாது மணல் அதிக அளவில் காணப்படுகிறது. தாது மணல் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு வர பிரசாதமாகும். அதாவது, பல்வேறு மலைகள், பாறைகள் சமவெளிகளை கடந்து வந்த ஆறுகள் கொஞ்சம், கொஞ்சமாக அவற்றின் மேற்பரப்பை அரித்து நீரோட்டத்தோடு கொண்டு வந்து கடலில் சேர்க்கும். பின்னர் அவை கடற்கரையில் ஒதுங்குகின்றன.
கனமான, தாது மணல் என்பது தாது வைப்புகளின் ஒரு வகுப்பாகும். இது சிர்கோனியம், டைட்டானியம், தோரியம், டங்ஸ்டன், அரிய பூமி கூறுகள், தொழில்துறை கனிமங்கள், வைரம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் அல்லது ரத்தினகற்கள் போன்றவற்றின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
இதற்கு, முன்பு தமிழக கடற்கரையில் இருந்து அள்ளப்படும் தாது மணலில் இருந்து பல்வேறு விதமான தாது பொருட்கள் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. 10 கி.மீ தூரத்துக்கு கடத்தல் சம்பவங்களை தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தாது மணல் இயற்கையாகவே கதிரியக்க தன்மை கொண்டவையாகும்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா வளா்ச்சி கழக விடுதி கடற்கரை, புலிக்குகை கடற்கரை பகுதி என குறிப்பிட்ட கடற்கரை பகுதிகளில் நீரோட்டத்தோடு அடித்து வரப்பட்ட தாது மணல் கடற்கரை பகுதி முழுவதும் அதிக அளவில் காணப்படுகிறது. சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு கடற்கரை பகுதி முழுவதும் மணல் பரப்பு கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது.