தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20 சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.;

Update:2025-03-05 16:55 IST

கோப்புப்படம் 

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் போது, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எந்த கொள்கை முடிவும் எடுக்கவில்லை. இத்தகைய சூழலில் இப்போதே இது குறித்து விவாதிக்க வேண்டுமா? அதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையா? என்றெல்லாம் வெளியில் வினாக்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை இந்தக் கூட்டம் அவசரமும், அவசியமும் ஆகும்.

ஏனென்றால், அண்மையில் கோவையில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை ஒன்று கூட குறைக்கப்படாது என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். ஆனால், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு உயர்த்தப்படவுள்ளது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் இந்தக் கூட்டம் மிகவும் அவசியம் ஆகும்.

இந்திய வரலாற்றில் இதுவரை அதனடிப்படையில்தான் 1952, 1963, 1973 ஆகிய ஆண்டுகளில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. 1973-ம் ஆண்டில் செய்யப்பட்ட மறுசீரமைப்பு 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்பட்டது. அதன்பின் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டன என்பதால், அதை ஊக்குவிக்கும் வகையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைக்கப்போவதில்லை என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். அதன்படி அரசியமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 42-ம் திருத்தத்தின்படி, மக்கள்தொகையில் என்னதான் மாற்றங்கள் ஏற்பட்டாலும் 2001 வரை மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை மாற்றக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

அதன்பின் 2001-ம் ஆண்டில் 25 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போதும் மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 2026-ம் ஆண்டு வரை மக்களவைத் தொகுதிகளில் எண்ணிக்கையை மட்டும் மாற்றுவதில்லை என்று வாஜ்பாய் ஆட்சியின் போது முடிவு செய்யப்பட்டது. அதற்காகத் தான் 84-வது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. எனினும், தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் எல்லைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டது.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்க விதிக்கப்பட்டத் தடை அடுத்த ஆண்டுடன் முடிவடையவுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். கொரோனா பாதிப்பால் அப்போது செய்ய முடியவில்லை என்றாலும் அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில் அதை செய்திருக்க வேண்டும். 2025-ம் ஆண்டுக்குள்ளாகவாவது மகள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதை செய்யாமல் 2026 அல்லது அதற்குப் பிறகு செய்ய நினைப்பதன் நோக்கம், அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் உடனடியாக மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைக்க முடியும் என்பதால்தான். இது நமக்கு எதிராக அமையும். இந்த விவகாரத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் எவ்வாறு மாற்றியமைக்கப்படும் என்பதற்கு பல கணக்குகள் உள்ளன. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 721 ஆகவோ, 753 ஆகவோ, 848 ஆகவோ உயர்த்தப்படலாம். எடுத்துக்காட்டாக 753 ஆக உயர்த்தப்பட்டால், மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 210 உயரும். இதில் தமிழ்நாட்டுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைக்கும். கேரளாவில் ஒன்று குறையும். ஒட்டுமொத்த தென் மாநிலங்களிலும் 15 தொகுதிகள் மட்டுமே கூடும்.

ஆனால், வட மாநிலங்களில் உத்தரப்பிரதேசத்தில் 48, பீகாரில் 30, என மொத்தம் 195 தொகுதிகள் உயர்த்தப்படும். இது எந்த வகையிலும் சரியானதாக இருக்காது. இந்தியாவில் தென் மாநிலங்கள்தான் மக்கள்தொகையை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தின. தென் மாநிலங்கள்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பங்களிக்கின்றன. அதற்கு தண்டனை அளிக்கும் வகையில் தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்த்தப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும் 30 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும். மூன்றில் ஒரு பங்கு உயர்த்தப்பட்டு 721 ஆக உயர்த்தப்பட்டால் தமிழகத் தொகுதிகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்த்தப்பட வேண்டும். சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20 சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த எண்ணிக்கை ஒரு போதும் குறையாது என்று தமிழக மக்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அது தான் நியாயமானதாக இருக்கும்.

இந்த விவகாரம் தொடர்பாக தென் மாநிலங்களின் முதல்-அமைச்சர்களை தமிழக முதல்-அமைச்சர் நேரில் சந்தித்துப் பேசி, அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.

இருமொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா? என்பது குறித்து விவாதிப்பதற்கும் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிக்கலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பி, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து கேட்டு விளக்கம் பெற வேண்டும் என்றும் பா.ம.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்