திருச்செந்தூரில் 500 மீட்டர் வரை உள்வாங்கிய கடல்

அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற கனத்த நாட்களில் திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கும்.;

Update:2025-10-19 12:00 IST

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற கனத்த நாட்களில் திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கும். மேலும் சீற்றத்துடனும் காணப்படும்.

குறிப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடல் திடீரென உள்வாங்கி காணப்படுகிறது. கோவில் முன்புள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடற்கரை கரையிலிருந்து சுமார் 70 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கடலின் உள்ளே இருந்த பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்பட்டன.

இருப்பினும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கடலில் நின்று பக்தர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் கடலில் கிடக்கும் சிற்பி சிறிய வகை சங்குகளை கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சேகரித்து சென்றனர். காவல்துறையினர் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் ஆழமான பகுதியில் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்