இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்
தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் அவர்களை போராட வைத்திருப்பது முறையற்றது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி கடந்த 15 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றாதது முறையற்றது. 2009-க்கு பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதிய வித்தியாசத்தை சரிசெய்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதே முக்கியக் கோரிக்கை. ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி அரசுக்கு ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தின் மூலம் வலியுறுத்துகின்றனர். போராட்டத்தின் நடுவே ஆசிரியர்கள் மயக்கம் அடைந்ததும் வேதனைக்குரியது.
ஆசிரியர்களின் கோரிக்கை சம்பந்தமாக அரசுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது நடைபெறுவதும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைவதும் போராட்டம் தொடர்வதற்கு காரணமாக அமைகிறது. பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு எட்டப்படவில்லை. ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம், தொடர் போராட்டம் என பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின்போது ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் 14 வது நாளான நேற்றைய முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 2,185 இடைநிலை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் விரைந்து தங்கள் கோரிக்கை தீர்க்கப்பட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து போராடி வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் இந்த போராட்டம் 15 நாட்களை கடந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றாதது மனித உரிமைக்கு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராடி வருவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத அபாயகரமான நிலை உருவாகியுள்ளது. இந்த எச்சரிக்கை அரசுக்கு மட்டும் அல்ல முழு சமூகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாக அமைகிறது.
எனவே தமிழக அரசு மாணவர்களின் கல்வி, ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன் ஆகியவற்றை முக்கிய கவனத்தில் கொண்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.