சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இருப்பு: வடகிழக்கு பருவமழை நீரை என்ன செய்யப்போகிறோம்?

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-10-14 15:57 IST

சென்னை,

தமிழ்நாட்டில் வசிக்கும் 8 கோடி மக்களில் சுமார் 1 கோடி பேர் சென்னை மற்றும் புறநகர் பகுதியில்தான் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் குடிநீர் தேவைக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய 6 ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்த 6 ஏரிகளிலும் 4,985.82 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஓரளவு பரவலாக பெய்ததால், இப்போதே 9,824.35 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

இந்த 6 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு என்பது 13,222 மில்லியன் கன அடி ஆகும். இதை வைத்து பார்க்கும்போது இன்னும் 3,397.65 மில்லியன் கனஅடி அளவே தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும் என்பதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அடுத்த ஒரு மாதத்தில் சராசரி அளவு மழை பெய்தாலே நிரம்பிவிடும் என்ற நிலையில் உள்ளது. அப்படி என்றால், ஏரி நிரம்பியதுபோக மீதமுள்ள உபரி நீர் திறந்துவிடப்பட்டு வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்படும்.

இன்று காலை நிலவரப்படி, பூண்டி ஏரியில் 139.40 அடி (மொத்த கொள்ளளவு 140 அடி), சோழவரம் ஏரியில் 51.22 அடி (65.50), புழல் ஏரியில் 48.92 (50.20), கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 113.08 அடி (115.35), செம்பரம்பாக்கம் ஏரியில் 79.92 அடி (85.40), வீராணம் ஏரியில் 45.80 அடி (47.50) தண்ணீர் இருப்பு உள்ளது.

இதனால், வடகிழக்கு பருவமழை நீரை வீணாக கடலில் கலக்கச் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடலில் விடுவதால், மழை வெள்ள பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்