வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்ைட அடுத்த இடையான்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரி(வயது50). இவரது கணவர் இறந்துவிட்டார். மகன், மகள்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் 4 பேர் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சத்தம்கேட்டு கோடீஸ்வரி திடுக்கிட்டு எழுந்தார். அப்போது 4 பேரும் நகை, பணத்தை எங்கே வைத்துள்ளாய்? என கேட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றித்தரும்படி மிரட்டியுள்ளனர். கோடீஸ்வரி மறுக்கவே அவரது கை, கால்களை கட்டி தாக்கினர். பின்னர் அவர் அணிந்து இருந்த 7½ பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டதோடு பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி கயிறுகளை அவிழ்த்து வெளியே வந்த கோடீஸ்வரி கூச்சலிட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காயமடைந்த கோடீஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.