திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவில் விவகாரங்களில் கோர்ட்டு தலையிடக்கூடாது - தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம் சொத்துரிமை சார்ந்த வழக்கும்தான் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
மதுரை,
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படும். ஆனால் இந்த தீபத்தை, மலையில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று மதுரை எழுமலை பகுதியை சேர்ந்த ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சம்பந்தப்பட்ட பகுதியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. தீபத்தூணுக்கும், தர்காவுக்கும் குறுகிய இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம் ஏற்றும்பட்சத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவும் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கார்த்திகை தீபமான 3-ந்தேதி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், 3-ந்தேதி வழக்கம் போல திருப்பரங்குன்றம் உச்சிபிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காட்டி தீபத்தூணில் தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
உடனடியாக, மாலை 6 மணியளவில் ராம ரவிக்குமார், மீண்டும் ஐகோர்ட்டில் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரே உடனடியாக தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்றும், அவருக்கு ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதனால் ராம ரவிக்குமார், மத்திய படையினருடன் தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்றார்.
அதற்கிடையில் அங்கு அதிகளவில் கூட்டம் கூடியதால், மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். எனவே அனைவரும் கலைந்து செல்லும்படி கேட்டு கொள்ளப்பட்டனர். மேலும் இந்த வழக்கில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய இருப்பதால், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று போலீசார் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். அதனால் அன்றைய தினம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
அதற்கிடையில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதன் தொடர்ச்சியாக மனுதாரர் ராம ரவிக்குமார், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மனுவை உடனடியாக தாக்கல் செய்தார்.
அதனை அப்போதே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் மனுதாரர் உள்ளிட்ட 10 பேர் சென்று தீபம் ஏற்றலாம். அதற்கு போலீஸ் கமிஷனர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து ராம ரவிக்குமார், தீபம் ஏற்ற சென்றார். ஏற்கனவே அங்கு பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அதிகளவில் குவிந்து இருந்தனர். பதற்றம் மிகவும் அதிகரித்ததால், போலீசார் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை உடனடியாக கைது செய்தனர்.
அதேவேளையில் சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்ய இருப்பதால் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று போலீசார் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். அதனால் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. இதற்கிடையில் தமிழக அரசு சார்பில் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சூழலில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணிலும் தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா தவறா என்பதற்கே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும்.
கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்ல முடியாது. கோர்ட்டு கூட சொல்ல முடியாது. தேவஸ்தானமே முடிவு செய்ய இயலும். இது குறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்னை வந்தால், கோர்ட்டை காரணம் காட்ட காட்ட இயலாது. அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்ட ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அதன்பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், “திருப்பரங்குன்றம் வழக்கு, தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை தொடர்பானதும் கூட. உங்கள் கோரிக்கையை (தமிழ்நாடு அரசு) ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன். ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது” என்று தெரிவித்தார்.