திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் ஓரிரு நாளில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு?
மதுரையில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு கேரள மாநிலத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.;
மதுரை,
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், மதுரை வர்த்தக ரீதியாக கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மதுரையில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு கேரள மாநிலத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்காக தற்போது மதுரையில் இருந்தும், மதுரை வழியாகவும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், புனலூர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி மற்றும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் செல்கிறது. இந்த ரெயில் (வ.எண்.16344) மதுரையில் இருந்து தினமும் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16343) திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. அதாவது சுமார் 617 கி.மீ. தூரத்தை 15 மணி நேரத்தில் கடக்கிறது.
இந்த ரெயிலை ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கேரள பயணிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து, இந்த ரெயிலை மதுரையில் இருந்து ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்ய ரெயில்வே வாரியம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒப்புதல் கொடுத்தது. அதன்படி, இந்த ரெயில் இன்னும் ஒருசில நாட்களில் ராமேசுவரத்துக்கு நீட்டிப்பு செய்து இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ரெயில் புறப்படும், சென்றடையும் நேரத்தில் மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
பாலக்காடு ரெயில் நிலையத்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரத்துக்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடையும் வகையில் நேர மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.30 மணிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த ரெயில் மதுரையில் இருந்து திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கொல்லங்கோடு, பாலக்காடு டவுன், பாலக்காடு, ஓட்டப்பாலம், திருச்சூர், ஆலுவா, எடப்பள்ளி, எர்ணாகுளம் டவுண், கோட்டயம், செங்கனச்சேரி, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயன்குளம், கருங்காப்பள்ளி, கொல்லம், வர்கலா, கழக்கூட்டம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.