தூத்துக்குடி: பைக்குகள் மோதிய விபத்தில் முதியவர் பலி
சாத்தான்குளத்தை அடுத்த அரசூர் தனியார் பொறியியல் கல்லூரி அருகே இரு பைக்குகளும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேரும் காயமடைந்தனர்.;
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரைச் சேர்ந்த தேவசாமிஆத்தி (வயது 60) என்பவர், தனது மகன் பிரகாஷ்(25) என்பவருடன், சாத்தான்குளம் வழியாக திசையன்விளைக்கு நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். கடக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் மனைவி புனிதாஜென்சி(32) என்பவர் ஒரு பெண்ணுடன் திசையன்விளையிலிருந்து சாத்தான்குளத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
சாத்தான்குளத்தை அடுத்த அரசூர் தனியார் பொறியியல் கல்லூரி அருகே இரு பைக்குகளும் மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த தேவசாமிஆத்தியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.