தூத்துக்குடியில் லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு: 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் ஒரு லாரி டிரைவரை 3 வாலிபர்கள் சேர்ந்து அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டியதோடு, லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.;
நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவரது மகன் கோபு (வயது 60), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நாமக்கல் கருமாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன டேங்கர் லாரியில், கொச்சியிலிருந்து பெட்ரோலிய கேஸ் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மடத்தூர் பாரத் பெட்ரோலியம் கேஸ் கம்பெனியில் லோடு இறக்க வந்துள்ளார். அப்போது அவர் கம்பெனி வெளியே, சர்வீஸ் ரோட்டில் டேங்கர் லாரியை நிறுத்திவிட்டு லாரியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இரவு 11 மணியளவில் ஒரு வாலிபர் லாரி கதவை தட்டி திறக்க சொல்லியுள்ளார். உடனே டிரைவர் கோபு கதவை திறந்தவுடன் 3 வாலிபர்கள் கையில் அரிவாளுடன் வந்து, அவரை மிரட்டி செல்போன் மற்றும் பணம் கேட்டுள்ளனர். அதற்கு கோபு தரமறுத்து எதிர்த்து போராடி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் கோபுவை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டியும், லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று லாரி டிரைவரை உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் தூத்துக்குடி மடத்தூர் துரைசிங் நகரை சேர்ந்த லிங்கசெல்வன் மகன் அஸ்வின் ஜெயக்குமார்(20), வாழாவெட்டி மகன் வேல்முருகன்(19), மடத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்த ஜெயம் மகன் காமராஜ்(எ) காமேஷ்(18) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து அரிவாள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.