திருச்சியில் பரபரப்பு: பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உட்பட 4 பேர் கைது

திருச்சியில் பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-10-03 19:42 IST

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கு திருமணமாகி, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவரது மனைவி சித்தாள் வேலைக்கு சென்று அதில் வரும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். ரவிக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு, தனது மகளை வெளியே அழைத்துச் சென்று உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தங்க வைத்ததாகவும், பின்னர் சமாதானமடைந்து, தனது குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி வழக்கம்போல் மனைவியுடன் தகராறு செய்த ரவிக்குமார், குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் நீண்ட நாட்களாக குழந்தையை அவர் வீட்டிற்கு அழைத்து வரவில்லை. இதுகுறித்து அவரது மனைவி, அவரிடம் கேட்டபோது நண்பர் வீட்டில் தங்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரவிக்குமார் கூறியபடி அவரது மனைவி, அப்பகுதியை சேர்ந்த பூக்கடை சாகுலிடம் சென்று தனது குழந்தை பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ‘உங்களது மகள் என்னிடம் இல்லை. நீங்கள் குழந்தையை வளர்க்க கஷ்டப்படுகிறீர்கள் என்றும், உங்களது நடத்தை மீது சந்தேகம் உள்ளதாகவும், அதனால் அந்த குழந்தையை வேறொருவருக்கு தத்து கொடுக்கும்படியும் உங்களது கணவர் ரவிக்குமார் கூறியதால், அந்த குழந்தையை ஒருவருக்கு தத்து கொடுத்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமாரின் மனைவி, இது குறித்து அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவிக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த முருகன்-சண்முகவள்ளி தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால், அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்க நினைத்தனர். இதையடுத்து அவர்களிடம் ரவிக்குமாரின் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு சாகுல் விற்றது விசாரணையில் தெரியவந்தது. இதில் ரூ.15 ஆயிரத்தை ரவிக்குமாருக்கு கொடுத்ததாக சாகுல் கூறியுள்ளார். ஆனால் ரவிக்குமார், தான் அந்த பணத்தை பெறவில்லை என்றும், தனக்கு தினமும் மது அருந்த சாகுல் பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் முருகன்-சண்முகவள்ளி தம்பதி, அந்த குழந்தையை நன்கு பராமரித்து வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு, தாயிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் சட்டவிரோதமாக குழந்தையை பணத்திற்கு விற்ற பூக்கடை சாகுல், ரவிக்குமார் மற்றும் முருகன், சண்முகவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்