ரஷிய ஆயத்த ஆடை சந்தையை கைப்பற்ற திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் முனைப்பு

அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தையை நோக்கி நகர தொடங்கியுள்ளனர்.;

Update:2026-01-08 04:58 IST

திருப்பூர்,

உலக அளவில் ஆயத்த ஆடை சந்தையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்ததாக ரஷியா உள்ளது. ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடிக்கு ரஷியா, பிற நாடுகளில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்கிறது. ரஷியாவுக்கு ஆடை ஏற்றுமதியில் சீனா முதலிடத்திலும், இந்தியா 10-வது இடத்திலும் இருந்து வருகிறது.

ஆயத்த ஆடை உற்பத்தியில் இந்தியாவில் திருப்பூர் மாநகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்க ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூர் 60 சதவீத பங்களிப்பை வழங்கி வந்தது. அமெரிக்காவின் அதிகப்படியான வரி விதிப்பு காரணமாக அமெரிக்க ஆர்டர்கள் வருகை குறைந்து ஆடை உற்பத்தியில் தேக்கம் நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தையை நோக்கி நகர தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பிற நாடுகளுடன் ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து, ஓமன், நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சமீபகாலத்தில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பாவுடன் விரைவில் ஒப்பந்தம் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது.

ரஷியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ரூ.471 கோடியும், 2021-ம் ஆண்டு ரூ.557 கோடியும், கொரோனா காலத்தில் 2022-ம் ஆண்டு ரூ.248 கோடியும், 2023-ம் ஆண்டு ரூ.350 கோடியும் இந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்த ஆண்டு ரூ.862 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. அதாவது முந்தைய ஆண்டைவிட 2 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் அமையும் வரை பிறநாட்டு சந்தையை நோக்கி ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் செலுத்தியதன் விளைவாக ரஷியாவுடன் ஏற்றுமதி 2 மடங்கு உயர்ந்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத ஆடைகளை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார்கள். இது வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைப்பயன்படுத்தி ரஷியாவிலும் புதிய ஆர்டர்களை கைப்பற்ற முனைப்புகாட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் ரஷியாவில் மாஸ்கோ நகரில் வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் சர்வதேச பேஷன் டிசைன் கண்காட்சி நடைபெற உள்ளது. புதிய சந்தையை கைப்பற்ற நினைக்கும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் ரஷியா கண்காட்சியில் பங்கேற்று பார்வையிடும்போது அவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று ஏ.இ.பி.சி. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்