இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-07-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:- மதிமுக இருக்க கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். மதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள். உயிரை கொடுத்து மதிமுகவை 31 ஆண்டுகளாக கட்டி காப்பாற்றி வருகிறேன் என்றார்.
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கே.சி.வீரமணியின் வேட்புமனுவில் உள்ள சொத்து மதிப்பிற்கும், வருமான வரி கணக்கில் கூறப்பட்ட மதிப்பிற்கும் ரூ.14 கோடி வித்தியாசம் உள்ளது. தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டால் அது குறித்து புகார் மனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என்று தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தது. இந்த வழக்கின் விசாரணை ஜூலை 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
மராட்டியத்தில் 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனை செய்ததற்காக பள்ளி முதல்வரும் பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவறையில் ரத்தக் கறைகள் தென்பட்டதை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஈரோடு, தென்காசி, கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் விபத்து குறித்து பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் பேசியதாக ஆதீனம் மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூர் ரெயில் விபத்து - செம்மங்குப்பம் கேட் கீப்பர், ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன் வழங்கப்பட்ட விவகாரத்தில் வேன் ஓட்டுநர், கேட் கீப்பர் ஆகிய இருவரைத் தவிர 11 பேர் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ராணிப்பேட்டை - மேல்விஷாரத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கண்டித்து ஆரணி எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் அருகே நான்காம் மணல் தீடை தீவில் இருந்த கியோசன் என்பவரை கடலோரக் காவல் படையினர் பிடித்து தனுஷ்கோடிக்கு அழைத்து வந்து மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் வரைவு வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது. வாக்காளர் திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
திருச்செந்தூர் கடற்கரையில், செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு, கடல் 100 அடிக்கு உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கிய காரணத்தினால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன.