புதுச்சேரி: 4,200 அரசு பணியிடங்களுக்கு தேர்வு
புதுச்சேரியில் 4,200 அரசு பணியிடங்களை நிரப்ப அடுத்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் தெரிவித்துள்ளார். பட்டதாரி அடிப்படையிலான தேர்வு 2026 ஏப். 12ம் தேதியும், மேல்நிலை பள்ளி அளவில் மே 5ம் தேதியும் நடைபெறுகிறது. தொழில்நுட்ப பிரிவுகளுக்கு ஜூன் 21ம் தேதி தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்? நடிகர் சங்கத்திற்கு ஐகோர்ட்டு கேள்வி
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. நடிகர் சங்கத்துக்காண புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறும் நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும்; தேர்தல் நடத்த வேறு எந்த சிக்கலும் இல்லை என நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்த வழக்கின் விசாரணை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
சென்னையில் கனமழை
தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனையொட்டி சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், எழும்பூர், சிந்தாரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னையில் சுட்டெரித்த வெயில் திடீரென பெய்த மழையால் சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
விரைவில் தமிழகம் முழுவதும் ராமதாஸ் சுற்றுப்பயணம்
கிராமங்களை நோக்கி பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கும் ராமதாஸ். ஏற்கனவே அன்புமணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு போட்டியாக ராமதாசும் கிராமங்களை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
பிரசார பாதையை மாற்றும் விஜய்
திருச்சியில் விஜய் சுற்றுப்பயணம் செய்யும் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற காவல்துறை அனுமதி மறுத்ததால் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் விஜய் உரையாற்றும் வகையில் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கவின் ஆணவக் கொலை வழக்கு - காவல் நீட்டிப்பு
பொறியியல் இன்ஜினீயர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, சுர்ஜித் அவரது தந்தை எஸ்.ஐ சரவணன் உள்ளிட்ட மூவருக்கு 23ஆம் தேதி வரை காவல் நீட்டித்து திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே குடும்பத்தினர் 4 பேர் தண்ணீரில் குதித்து தற்கொலை முயற்சி
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் தண்ணீரில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். குப்பம் பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மண மூர்த்தி (50) மனைவி ஜோதி (40), மகள் கிர்த்திகா (20), ஜோதியின் தாயார் சாராதாம்மாள் (75) நால்வரும் ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீரில் குதித்துள்ளனர். அங்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக தண்ணீரில் குதித்து ஜோதி, கிர்த்திகா இருவரையும் மீட்டனர். லக்ஷ்மண மூர்த்தி, சாராதாம்மாள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஸ் கிருஷ்ணா சாய்ல் கைது
பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஷ் கிருஷ்ணா சாய்லை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத இரும்பு தாது ஏற்றுமதி வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஷ் கிருஷ்ணா சாய்ல் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ. விரேந்திராவை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. கர்வார் - அங்கோலா சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஸ் கிருஷ்ணா சாய்ல் கைது செய்யப்பட்டார்.
திருமண நிதியுதவி திட்டம் - தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய டெண்டர்
சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவி திட்டங்கள் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 8 கிராம் தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடுப்பட்டுள்ளது. மொத்தம் 45 கோடி ரூபாய் அளவுக்கு தங்க நாணையங்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - கல்வி வாரிய குழு ஒப்புதல்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பிற்கு கல்வி வாரிய குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.பள்ளி கல்விக்கான மாநில கல்விக் கொள்கை அறிவிப்பில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என வெளியிடப்பட்டது.முதல் கட்டமாக கல்வி வாரிய கூட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதற்காக முடிவு எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதலே தேர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அரசின் அறிவிப்பை செயல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது