முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் வெயிலில் அமர்ந்திருந்த பெண் காவலர்கள்
சென்னை, எழும்பூரியில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காவலர் நாள் விழாவினை முன்னிட்டு காவலர் நாள் உறுதிமொழி ஏற்பு மற்றும் காவலர் நாள் விழா முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் ராஜரத்தினம் மைதானத்தில் மேற்கூரை அமைக்காததால் கடும் வெயிலில் பெண் காவலர்கள் அமர்ந்திருந்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகிகள்
சேலம் பனங்காடு ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். தேக்வாண்டோ பயிற்சியாளரான இவர், 10க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். மாணவிகளை வெளிமாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு அழைத்து செல்வது வழக்கம். கடந்த 6ம் தேதி, பயிற்சிக்காக வெளி மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க, மாணவிகளை அழைத்து சென்றார்.
விஜயகுமாரின் உறவினர் இறந்ததாக வந்த தகவலை தொடர்ந்து, மாணவிகளை விஜயகுமாரின் தம்பி கணேசன் பொறுப்பில் விட்டு, துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு, கணேசன் பயிற்சிக்கு சென்ற 14 வயது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி அதிர்ச்சியடைந்து பெற்றோரிடம் கூறுவதாக தெரிவித்துள்ளார். உடனே பயத்தில் கணேசன், சகோதரர் விஜயகுமாரை தொடர்பு கொண்டு, இந்த விவகாரத்தை தெரிவித்துள்ளார்.
அவர் பயிற்சி நடைபெறும் இடத்துக்கு வந்து, அந்த 14 வயது மாணவியின் செல்போனை பறித்து கொண்டு, வீட்டில் இதுபற்றி கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். இந்நிலையில், அந்த மாணவி, தோழியின் செல்போனை வாங்கி, தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கவிதா, போக்சோ வழக்குப்பதிவு செய்து பயிற்சியாளர் விஜயகுமாரை கைது செய்தார்.
தலைமறைவான விஜயகுமாரின் தம்பி கணேசன் போலீசில் சரணடைந்தார். கைது செய்யப்பட்ட விஜயகுமார், அதிமுக கிழக்கு ஒன்றியத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒன்றிய இணை செயலாளராக உள்ளார். சரணடைந்த அவரது தம்பி கணேசன் ஆண்டிப்பட்டியில் அதிமுக கிளை செயலாளராக உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனாவுக்கு அதிக வரி.. ஐரோப்பிய கூட்டமைப்புக்கு டிரம்ப் வலியுறுத்தல்
இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவீத வரி விதித்தது. இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை உக்ரைன் போரில், ரஷியா பயன்படுத்துவதாக, டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். ரஷிய அதிபர் புதினுக்கு அழுத்தம் தர இந்தியா, சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்றும், சீனாவுக்கு 100 சதவீத வரி, இந்தியாவுக்கு அதிகபட்ச வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை கவின் ஆணவக்கொலை விசாரித்த பாளை. இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் மாற்றம்
நெல்லை மாவட்டத்தில் முக்கியமான காவல் நிலையமாக பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் விளங்கி வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக இருந்த காசி பாண்டியனை நெல்லை டவுன் காவல் நிலையத்துக்கும், டவுன் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜனை தச்சநல்லூருக்கும், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாரை பாளையங்கோட்டைக்கும் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார்.
காசிபாண்டியன் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டராக இருந்தபோது காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காதலியின் பெற்றோர் இருவரும் போலீஸ் துறையை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கு பாளையங்கோட்டை போலீசில் இருந்து சிபிசிஐடி
விசாரணைக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் தற்போது அவர் நெல்லை டவுனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்த தகவல் தவறானது - அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிகத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ள தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கையை விட, இந்தி பிரச்சார சபாவில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். இதன்படி தமிழகத்தில் 2025-26ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ்வழி கல்வியில் 70 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், இந்தி பிரச்சார சபாவில் 80 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் வலைதளபக்கத்தில், “ஆடிட்டர் தெரிவித்துள்ள தகவல் தவறானது. 2025-26ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 769 பேர் சேர்ந்துள்ளனர். 70 ஆயிரம் அல்ல. ஆடிட்டர் குருமூர்த்தி பகிர்ந்த தகவல் தவறானது” என்று அதில் தெரிவித்துள்ளார்.
மதுரை தெற்கு வட்டாட்சியர் ராஜபாண்டி கைது
மதுரை மாவட்டம் குசவபட்டி கிராமத்தில் கிரஷர் அனுமதி வழங்க ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டு, ரூ.70,000 வாங்கிய மதுரை தெற்கு வட்டாட்சியர் ராஜபாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். வட்டாட்சியரின் ஓட்டுநர் ராம்கேவும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
தஞ்சாவூர் பூச்சந்தை அருகே கல்லணை கால்வாயில் 20 கண் பாலத்தில் நேற்று மதியம் பெண் ஒருவர், 3 குழந்தைகளுடன் நடந்து சென்றார். திடீரென அவர், 3 குழந்தைகளுடன் கல்லணை கால்வாயில் குதித்தார். படித்துறையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் பார்த்து ஆற்றில் குதித்து 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் பெண், சிறுவன், சிறுமி ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். நீரில் மூழ்கியதால் மூச்சு திணறி 3 பேரும் உயிரிழந்தனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கைக்குழந்தையை மட்டும் மீட்க முடியவில்லை. இறந்த பெண்ணுக்கு 30 வயது, சிறுவனுக்கு 5 வயது, சிறுமிக்கு 14 வயது என தெரிய வந்தது. அவர்கள் விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை ( 11ஆம் தேதி) பிற்பகல் 3 மணியளவில் ஆசிரியர் சங்கங்களுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது என்றும், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் அதில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளகெவி, வட்டக்கானல் உள்ளிட்ட கொடைக்கானல் வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் இன்று காலை கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ரஞ்சி டிராபி: தமிழக அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?
இந்த சீசனுக்கான (2025-26) ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் சாய் கிஷோர் இடம் பெறாததால் தொடக்க ஆட்டக்காரர் என்.ஜெகதீசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.