திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒரே நேரத்தில் நடந்த 25 திருமணங்கள்
ஆனி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒரே நேரத்தில் 25 திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் முடிந்த கையோடு கோவில் யானை தெய்வானையிடம் புதுமண தம்பதிகள் ஆசீர்வாதம் பெற்றனர்.
மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு நான் காரணம் இல்லை - மல்லை சத்யா
மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு, நிச்சயமாக நான் காரணம் இல்லை. என் அன்புத் தலைவர் வைகோ எம்.பி. அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன்; இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம் என்று மல்லை சத்யா கூறியுள்ளார்.
நடிகை சரோஜா தேவி காலமானார்
பழம்பெரும் திரைப்பட நடிகை சரோஜா தேவி (வயது 87) பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்தவர்.
இந்திய திரையுலக வரலாற்றில் மிக சிறந்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படுபவர். அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் சரோஜா தேவி.சரோஜா தேவி இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட சிறப்புகுரிய விருதுகளை பெற்றுள்ளார். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம், இந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படம் மூலம் 1955-ல் திரையுலகில் தடம் பதித்தார் சரோஜா தேவி. 1958-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான சரோஜா தேவி பல மொழிகளில் 200 திரைப்படங்களில் நடித்துள்ளார்.நாடோடி மன்னம், அன்பே வா, ஆலயமணி, கல்யாண பரிசு, புதிய பறவை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி நாயகர்களாக வலம் வந்த எம்.ஜி.ஆர் உடன் 26 படங்கள், சிவாஜியுடன் 22 படங்களில் நடித்துள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,115-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.127-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மானாமதுரைக்கு புதிய டிஎஸ்பி நியமனம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பி-யாக இருந்த சண்முகசுந்தரம், அஜித்குமார் கொலை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் காரைக்குடி டிஎஸ்பி-யாக இருந்த பார்த்திபனை மானாமதுரை டிஎஸ்பியாக நியமித்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இன்று சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் புதிய டிஎஸ்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வானகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
பள்ளிகள் நிறைந்த சாலையில் மண், சவுடு லாரிகள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு உள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கனரக வாகனம் சென்று வருவதால் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர் திணறல். போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு அஞ்சி 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு நடக்க இருந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பட்டாசு வெடி விபத்து நடந்துவந்த நிலையில், இனி ஒரு விபத்து கூட நடக்கக் கூடாது எனக் கூறி உடனடி ஆய்வுக்குப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அச்சத்தில் ஆலைகளை உரிமையாளர்கள் மூடி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அரக்கோணம் செல்லும் புறநகர் ரெயில் சேவை வழக்கம்போல் இயக்கம்
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரெயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்கராஸை வென்றார் இத்தாலி வீரர் சின்னர். சாம்பியன் பட்டம் வென்ற சின்னருக்கு பரிசுத்தொகையாக ரூ.34 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு
திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட நிலையில் 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.இருப்பினும், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரெயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.