இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025

Update:2025-01-30 09:07 IST
Live Updates - Page 2
2025-01-30 07:54 GMT

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் உஸ்மான் கவாஜா

இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடயேயான 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அதில் உஸ்மான் கவாஜா, ஸ்மித் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஸ்மித் 141 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய உஸ்மான் கவாஜா இரட்டை சதமடித்து அசத்தினார். இது அவரது முதல் இரட்டை சதம் ஆகும்.

2025-01-30 07:49 GMT

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (30-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிர் செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-01-30 07:13 GMT

கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை - சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி

ஐகோர்ட்டை நாட இயலாத ஏழைகள், நீதியைப் பெற போராட வேண்டியுள்ளதாகவும், கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தாலும் அதனை காவல்துறையினர் பின்பற்றுவதில்லை என்றும் சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.

மேலும் பல வழக்குகளில் காவல்துறை, குறித்த காலத்திற்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை என்றும். காவல்துறையினர் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதையே இது காட்டுவதாகவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் உள்துறை செயலாளர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

2025-01-30 06:49 GMT

வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு, தனது அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இன்று தாக்கல் செய்தது. 

2025-01-30 06:39 GMT

தந்தை-மகள் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு - போலீசார் விசாரணை

ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் அழுகிய நிலையில் தந்தை மற்றும் மகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 70 வயதான தந்தை சாமுவேல் சங்கர், 35 வயதான மகள் சிந்தியா உயிரிழந்த நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சாமுவேல் சங்கருக்கு வீட்டில் வைத்து டயாலிசிஸ் சிகிச்சை பார்த்த மருத்துவர் எபினேசரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சையின்போது சாமுவேல் உயிரிழந்ததால் மகள் சிந்தியா வாக்குவாதம் செய்ததாகவும், அவரை மருத்துவர் தள்ளிவிட்டபோது உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் உயிரிழந்ததால் அச்சத்தில் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2025-01-30 06:28 GMT

மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவப் படிப்புகளுக்கான மாநில இட ஒதுக்கீட்டில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். இடஒதுக்கீடு தொடர்பான சுப்ரீம்கோட்டின் தீர்ப்பு அரசு மருத்துவர்களை பாதிக்கும். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பால் இந்த ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பாதிப்பு இல்லை. வசிப்பிட அடிப்படையிலான இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டை நாடுவோம்.

50 சதவீத முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு மூலம் 1,207 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். சமூக நீதியை கடைபிடிப்பதில் இட ஒதுக்கீடு என்பது இன்றியமையாதது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது” என்று அவர் கூறினார். 

2025-01-30 06:19 GMT

2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர்: டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது


பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் என நாடாளுமன்ற செய்தி குறிப்பு தெரிவித்திருந்தது. இதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடரானது நாளை (ஜனவரி 31-ந்தேதி) தொடங்குகிறது.

இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பின்னர் பிப்ரவரி 13-ந்தேதி கூட்டத்தொடர் முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து .2-வது பகுதி கூட்டத்தொடரானது மார்ச் 10-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி நிறைவடையும்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நாளை உரையாற்றுகிறார்.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவை மத்திய அரசுகோர உள்ளது . மேலும் பட்ஜெட் தொடர்பான ஆலோசனையும் நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

2025-01-30 06:12 GMT

மகாத்மா காந்தி நினைவு தினம்: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினத்தை ஒட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றார்.

இதன்படி, “தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன்.

அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமை ஆகும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

2025-01-30 06:04 GMT

தோல் தொழிற்சாலை கழிவுகள் பாலாற்றில் கலந்த விவகாரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு - சுப்ரீம்கோட்டு தீர்ப்பு


வேலூர் பாலாற்றில் தோல் ஆலை கழிவுகளால் ஏற்பட்ட மாசால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவுபிறப்பித்திருந்த ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்டு இன்று உறுதி செய்துள்ளது. இழப்பீடு தொகையை தோல் தொழிற்சாலைகளிடம் வசூலிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வேலூர் மாவட்டத்தில் தோல் ஆலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க குழு அமைக்கவும் சுப்ரீம்கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.

ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், மாநில, மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய குழு பாலாற்றில் தோல் ஆலை கழிவு கலப்பதை கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்