இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Jan 2025 6:56 PM IST
தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் மகள் கைது
தென்ஆப்பிரிக்காவில் 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜுமா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். கடைகளை சூறையாடினர். கட்டிடங்கள், வீடுகளுக்கு தீ வைத்து சொத்துகளை சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் ஜேக்கப்பின் மகள் டுடுஜைல் ஜுமா-சம்புத்லா, எக்ஸ் வலைதளத்தில் வன்முறையாளர்களை தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வன்முறையில், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறையில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவின் மகள் சம்புத்லா, பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
- 30 Jan 2025 6:16 PM IST
வேலூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- 30 Jan 2025 6:01 PM IST
ஈ.சி.ஆர். சம்பவம்; பெண்களை துரத்திய இளைஞர்களின் கார் பறிமுதல்
சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது.
இந்த விவகாரத்தில், 2-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒரு காரில் சென்றனர். அந்த காரை தி.மு.க. கட்சிக்கொடி பொருத்திய காரில் வந்த 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். இதனை தொடர்ந்து, போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், பெண்களை துரத்திய இளைஞர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
- 30 Jan 2025 5:19 PM IST
3-வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தை
ரிலையன்ஸ், ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி பங்குகளின் கொள்முதல் அதிகரித்ததால், இந்திய பங்குச்சந்தைகள் மூன்றாவது நாளாக இன்று ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 226.85 புள்ளிகள் உயர்ந்து 76,759.81 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 86.40 புள்ளிகள் உயர்ந்து 23,249.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
- 30 Jan 2025 4:47 PM IST
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இரு தரப்பிலும் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.
இதன்படி, பணய கைதிகளில் ஒருவரான இஸ்ரேல் ராணுவ வீராங்கனை ஆகம் பெர்ஜர் (வயது 20) என்பவரை ஹமாஸ் அமைப்பினர் இன்று விடுவித்து உள்ளனர். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக குண்டுகளால் சேதமடைந்த கட்டிடங்கள் மீது மக்கள் திரளாக நின்றபடியும், தெருக்களில் ஒன்று கூடியும் காணப்பட்டனர்.
பெர்ஜரை, அந்த கூட்டத்தினரின் முன் ஊர்வலம்போல் அழைத்து சென்று செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். இஸ்ரேல் அரசும், பெர்ஜர் வந்து விட்டார் என பின்னர் உறுதி செய்துள்ளது. கடத்தப்பட்ட 5 இளம் வீராங்கனைகளில் பெர்ஜரும் ஒருவர். மற்ற 4 பேர் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
- 30 Jan 2025 4:26 PM IST
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் மேஜர் மற்றும் ஒரு சிப்பாய் ஆகியோர் உயிரிழந்தனர்.
- 30 Jan 2025 3:27 PM IST
டெல்லியில் யமுனை ஆற்றில் விஷம் கலப்பு பற்றி பேசியதற்கு உரிய பதிலளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், கெஜ்ரிவால் பேசும்போது, தேர்தல் ஆணையம் அரசியல் செய்து வருகிறது. ஓய்வுக்கு பின் தேர்தல் ஆணைய தலைவர் ராஜீவ் குமாருக்கு ஒரு வேலை வேண்டும் என விரும்புகிறார்.
ராஜீவ் குமாரிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், வரலாறு உங்களை மன்னிக்காது. தேர்தல் ஆணையத்தில் அவர் குழப்பம் ஏற்படுத்தி விட்டார் என கூறியுள்ளார்.
- 30 Jan 2025 3:18 PM IST
அனைத்து கட்சிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்துக் கட்சிகளையும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார். மேலும் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் பிரச்சினைகள் குறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
- 30 Jan 2025 3:15 PM IST
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சுப்ரமணியன் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்-ருத்விகா காடே ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது.
- 30 Jan 2025 1:54 PM IST
மகாத்மா காந்தி நினைவு தின நிகழ்ச்சிகளை சென்னை காந்தி மண்டபத்தில் நடத்த மறுப்பது ஏன்? என தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.
காந்தி தன் வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.