இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மீண்டும் சிறப்புப் பாடலில் நடனமாடும் தமன்னா...எந்த படத்தில் தெரியுமா?
கேத்தரின் தெரசா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஷைன் ஸ்கிரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகிய பதாகைகளின் கீழ் சாஹு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்திற்கு பீம்ஸ் செசிரோலியா இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலையின் நடுவே கொடிக்கம்பம் வைக்கும் அரசியல் கட்சிகள் - ஐகோர்ட்டு அதிருப்தி
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாலைகளின் நடுவே உள்ள சென்ட்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள் அமைக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என அதிருப்தி தெரிவித்தார். மேலும், சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சி கொடிகள் இருந்தது தொடர்பான வீடியோ தன்னிடம் இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல்; ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு வெளியீடு
ஆக்சிஸ் மை இந்தியா இன்று வெளியிட்டு உள்ள கருத்துக்கணிப்பு முடிவில், என்.டி.ஏ. 131 இடங்களையும், மகாகத்பந்தன் கூட்டணி 108 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜன சுராஜ் கட்சி 1, மற்ற கட்சிகள் 3 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், என்.டி.ஏ. கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று பீகாரில் ஆட்சியமைக்கும் என்ற வகையில் பரவலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
‘தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்’ - எல்.முருகன்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக பேசிய பேச்சுகள், அறிக்கைகள், கடிதங்கள், தேர்தல் வாக்குறுதிகளை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், எண் 153-ல், ‘‘அறநிலையத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிவகங்கை: வாகனம் மோதி 3 பேர் பலியான சம்பவம்; போலீஸ் டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
பூவந்தி அருகே அஞ்சுயூர் விலக்கு பகுதியில் வந்தபோது அப்பகுதியில் போலீஸ் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனமும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பிரசாத், அவருடைய மனைவி சத்யா, குழந்தை அஸ்வின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த போலீஸ் வாகனத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் வந்துள்ளார். ஏட்டு பாலமுருகன் என்பவர் அந்த வாகனத்தை ஓட்டி வந்தார். இவர்கள் மதுரை வந்துவிட்டு திரும்பிச்சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு
இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 வீதம் (6 மாதத்திற்கும்) முனைவர் பட்டம்/முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் (3 வருடத்திற்கும்) உதவித்தொகையாக வழங்கப்படும்.
2025-2026 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்க புதிய இணையதளம் “fellowship.tntwd.org.in” உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை இவ்விணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 2025 – 2026 ஆம் கல்வியாண்டிற்கு தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் 12.11.2025 நாளில் இருந்து 12.12.2025 நாள்வரை இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் மேற்காணும் திட்டத்தினை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.”
‘இதுதான் எங்கள் உலகம்’- ‘மாஸ்க்’ படத்தின் 2வது பாடல் வெளியீடு
அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் ‘மாஸ்க்’ படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘மாஸ்க்’ படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது. ‘இதுதான் எங்கள் உலகம்’ எனத்துவங்கும் இப்பாடலை ஆண்ட்ரியா , அனந்து, ஸ்மித் ஆஷர், அருள்பரன் வாஹீசன் ஆகியோர் பாடியுள்ளனர்
முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது: வெளியான அறிவிப்பு
பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் 2013ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இவ்விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரெயில் நரசபூர் வரை நீட்டிப்பு
ரெயில்வே வாரியம் அளித்துள்ள அனுமதியின்படி, சென்னை சென்டிரல்- விஜயவாடா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் ஜனவரி 12-ந் தேதி முதல் நரசபூர் வரை நீட்டிக்கப்படுகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் பகல் 11.45 மணிக்கு விஜயவாடாவை சென்றடைகிறது. அதன்பின்னர், மதியம் 12.29 மணிக்கு கூடிவாடாவையும், மதியம் 1.14-க்கு பீமாவரம் டவுனையும், மதியம் 2.10 மணிக்கு நரசபூரையும் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், நரசபூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இரவு 11.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.