இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மதுரையில் பெய்து வரும் கனமழையால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் ஒரு மணி நேரம் வரை வானில் வட்டமடித்தபடி இருந்தது.
மதுரை கள்ளழகர் திருவிழாவில், எந்த இடத்திலும் சாதிய பாகுபாடு இல்லை என சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு பாராட்டு தெரிவித்து உள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவைப்போல் அனைத்து இடங்களிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கலாமே என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு எதிராக ரவிசங்கர் என்பவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், கால் கிலோ வாங்கியுள்ளார். இதற்கு ரூ.425 பணம் பெறுவதற்கு பதிலாக ரூ.450 வசூலித்துள்ளனர் என இனிப்பகம் மீது மனுவில் புகார் அளித்தார்.
இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூலித்ததில் மன உளைச்சலுக்கு ஆளானேன் என தெரிவித்த அவர், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
இதனை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இனிப்பகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, வடகாடு திருவிழா விவகாரத்தில் கலவரம் நடந்த சம்பவ பகுதியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கலெக்டர் ஆய்வு செய்யவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கடந்த 4 முதல் 7ம் தேதி வரையிலான நாட்களில் கோவில் பிரச்சினை நடந்த இடத்தின் சி.சி.டி.வி. காட்சிகளை தாக்கல் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பிற்கு உள்ள முக்கியத்துவம் பற்றி அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கத்திடம், சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், எங்களை தவிர்க்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது பற்றி ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுபற்றி ஓ. பன்னீர் செல்வம் நாளை அறிவிப்பார் என கூறினார்.
இந்நிலையில், சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நிருபர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, தேர்தல் கூட்டணி பற்றி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தேன்.
சட்டசபை தேர்த்லில் எந்த மாதிரியான முடிவெடுக்க வேண்டும் என்பதுபற்றி கருத்துகளை கேட்டுள்ளோம். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்.
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம். கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை என்றார்.
டெல்லியில் ஹோண்டுராஸ் நாட்டின் தூதரக திறப்பு விழா இன்று நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, நமக்கு உற்ற துணையாக நின்ற நாடுகளில் ஹோண்டுராஸ் நாடும் ஒன்று என்றார்.
பாகிஸ்தானுடனான நம்முடைய உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது நிச்சயம் இருதரப்பு என்ற அளவிலேயே இருக்கும். பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்றால் அது, பயங்கரவாதம் ஒன்று மட்டுமே என பிரதமர் மிக தெளிவாக கூறி விட்டார் என்றும் கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நகைகளுடன் தப்பி ஓடிய ஊழியர் ரோஹித் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் மட்டும் 7 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 13ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது. இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். கூட்டணி குறித்து பிற கட்சிகள் பேசுவதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தேர்தல் கூட்டணி பற்றி உரிய நாளில் தவெக தலைவர் விஜய் அறிவிப்பார் என்று தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கூறியுள்ளார்.